ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலியா ஆலோசனை

மெல்போர்ன்

போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.


கடந்த மார்ச் மாதம் நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் எழுந்தது. அதை ஒட்டி கிரிக்கெட் வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோருக்கும் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டது.

இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு 12 மாதங்களும் பான்கிராப்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. அதை சரிகட்ட வாரியம் பல முயற்சிகள் எடுத்தும் வரிசையாக ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்து வந்தது.

அத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வலர்களும் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு இவ்வித தண்டனை அதிகம் என குறிப்பிட்டனர். பொதுவாக இத்தகைய குற்றத்துக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை மட்டுமே தண்டனையாக அளிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி கேவின் ராபர்ட்ஸ் நேற்று செய்தியாளர்களிடம், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த வீரர்கள் மீதான தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. அது மட்டுமின்றி தற்போது முக்கிய வீரர்கள் மூவர் இல்லாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மிகவும் பின்னடைந்துள்ளது.

அதே நேரத்தில் நன்கு விளையாடிய வீரர்களை இவ்வாறு தண்டிப்பது என்பது அவர்களை மிகவும் சோர்வடைய செய்வது என்பதையும் வாரியம் யோசித்தது. அதை ஒட்டி இவர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தடை நீக்கப்படலாம்” என தெரிவித்துள்ளார்.