ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், நடால், ஷரபோவா, கெர்பர், வோஸ்னியாக்கி 3வது சுற்றுக்கு தகுதி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், கரோலின் வோஸ்னியாக்கி 3வது சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.

கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது நாள் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரர் இங்கிலாந்து வீரர் டேனியல் இவான்சை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையடிய பெடரர் 7-6 (7-5), 7-6 (7-3), 6-3 என்ற நேர்செட் கணக்கில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி 3வது சுற்றிற்கு முன்னேறினார்.

Australian

அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் உல்க தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரரான ரபேல் நடால் 47ம் நிலையில் உள்ள ஆஸ்திரேலிய வீரரான மேத்யூவை எதிர்க் கொண்டார். போட்டி தொடங்கியதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் மேத்யூவை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 6-4, 4-6, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் 39-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

இதேபோன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி ஸ்வீடன் நாட்டு வீராங்கனையான் ஜோஹன்னா லார்சனை எதிர்த்தார். இதில் அதிரடியாக விளையாடிய கரோலின் 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஸ்வீடன் வீராங்கனையை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் டிமா பாபோஸ்சை (ஹங்கேரி) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் மரியா ஷரபோவா, கரோலின் கார்சியா, கிவிடோவா உள்ளிட்டோரும் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.