80% கொசுக்களை அழித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

குவீன்ஸாந்து,  ஆஸ்திரேலியா

ஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பகுதியில் விஞ்ஞானிகள் நோயைப் பரப்பும் கொசுக்களில் 80% அழித்துள்ளனர்.

உலகெங்கும் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.   அத்துடன் கொசுக்களால் பலவகை நோய்கள் பரப்பப்பட்டு மக்கள் அவதி அடைகின்றனர்.  அதை ஒட்டி பல நாடுகளில் கொசுக்களை ஒழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.   ஆனால் கொசுக்கள் இதையும் மீறி உற்பத்தி ஆகி நோய்களை பரப்புகின்றன.

ஆஸ்திரேலிய நாட்டின் குவீன்ஸ்லாந்து விஞ்ஞானிகள் ஒரு புதிய பாக்டீரியா ஒன்றை கண்டு பிடித்து அதை கொசுவுக்குள் செலுத்தி ஆண் கொசுவை உண்டாக்கி உள்ளனர்.   ஆண் கொசுக்கள் யாரையும் கடிக்காது என்பதால் இவைகள் மூலம் வியாதிகள் பரவுவதில்லை.   இவ்வாறு பெருமளவில் உருவாக்கப்பட்ட 2 கோடி ஆண் கொசுக்களை வெளியில் அனுமதித்துள்ளனர்.

அந்த ஆண் கொசுக்கள் ஏற்கனவே உள்ள பெண் கொசுக்களுடன் இணைந்தன.  ஆண் கொசுக்கள் அனைத்தும் பாக்டீரியாவால் மலடாக்கப்பட்டு விட்டன.   அதனால் இந்த கொசுக்களுடன் இணைந்த பெண் கொசுக்களால் இனப் பெருக்கம் செய்ய இயலவில்லை.   இவ்வாறு இந்த பகுதியில் உள்ள கொசுக்களின் எண்ணிக்கை 80% குறைந்துள்ளது.

இந்த முறை வெற்றிகரமாக உள்ளதால் மேலும் 3 கோடி ஆண் கொசுக்களை உருவாக்கி அவைகளை நாட்டின் மற்றொரு பகுதியான காசோவரி கோஸ்ட் பகுதியில் 3 நகரங்களில் வெளியில் விட்டுள்ளனர்.   இது குறித்து  விஞ்ஞானிகள், “இது இயற்கை முறையில் கொசுக்களை அழிக்கும் பணி ஆகும்.   இந்த பரிசோதனை ஏற்கனவே ஒரு சில விலங்குகளுக்கு செய்யப்பட்டுள்ளன.  கொசுக்களுக்கு செய்து வெற்றி கண்டது முதல் முறையாகும்” என தெரிவித்துள்ளனர்.