எந்த வழியில் வருகிறது என்பது பற்றி கவலையில்லை; ஆனால், வெற்றி என்பது எப்படியேனும் அடையப்பட வேண்டுமென்பது உலகில் நடைமுறையிலிருக்கும் ஒரு சித்தாந்தம்தான்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்த சித்தாந்தம் மிகவும் பிடித்தமானது. எதிரணியை அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்வது, பந்தை சேதப்படுத்துவது மற்றும் அவுட் என்று தெரிந்தாலும், நடுவரின் தீர்ப்புக்காக காத்திருப்பது, எதிரணி வீரர்களை காயப்படுத்தும் வகையில் பந்துவீசுவது உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் கையாள்வார்கள்.

இந்த டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியர்கள் இவற்றில் பலவற்றை செய்தார்கள்தான். அதில் குறிப்பாக, சிட்னி டெஸ்ட்டிலும் பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும், பாடி லைனில் பந்துவீசி இந்திய பேட்ஸ்மென்களை பெரிதும் காயப்படுத்தினார்கள் ஆஸ்திரேலிய பெளலர்கள்.

லைன் & லென்த்தில் பந்துவீசி இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த முடியாதவர்கள், குதர்க்க புத்தியால் குறுக்கு வழியில் முயன்றார்கள். இவர்களின் முரட்டுத்தனத்திற்கு புஜாரா, அஸ்வின், ஜடேஜா, விஹாரி, ரிஷப் பன்ட் உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் பலியானார்கள். ஆனாலும், ஆஸ்திரேலியர்களால் நினைத்ததை அடைய முடியவில்லை.

ஆனால், இந்தியாவின் வேகப் புயல்களோ, ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களிடம் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். பாடி லைன் & லென்த்தில் வீசி, எதிரணி பேட்ஸ்மென்களை காயப்படுத்த நினைக்கவில்லை. மாறாக, நுட்பமாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளினார்கள்.

எனவே, இந்த ஜூனியர் இந்திய பெளலர்களிடமிருந்து, ஆஸ்திரேலியாவின் சீனியர் பெளலர்கள் கற்றுக்கொள்வார்களா?