சிட்ணி:

ஆஸ்திரேலியாவில் கங்காரு தாக்கியதில் 35 தையல்கள் போடும் அளவுக்கு பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் இருந்து வட மேற்கில் 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டெம்பிள்ஸ்டோவ் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு டெபி உர்குஹர்ட என்ற 54 வயது பெண் பயிற்சியாளர் தனது வீட்டருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது 2 மீட்டர் உயரம் கொண்ட கங்காரு அவர¬ வழிமறித்து சராமரியாக தாக்கியது.

இதில் அந்த பெண் நிலைகுலைந்து போனார். தொடர்ந்து அடித்ததால் அந்த பெண்ணின் கையில் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது. எனினும் தொடர்ந்து அந்த கங்காரு அந்த பெண்ணை விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது. ஓரு கட்டத்தில் அவர் கீழே விழுந்ததால் கங்காரு அவரை விட்டுவிட்டு சென்றது.

இது குறித்து அந்த பெண் கூறுகையில், எனது இட புறத்தில் அந்த கங்காரு தொடர்ந்து கடுமையாக தாக்கியது. எனது ஆடைகளை பிடித்து என்னை தூக்கி எறிந்தது. நான் உயிர் பிழைப்பதற்காக இறந்ததுபோல் நடித்தேன். அந்த கங்காரு அங்கிருந்து ஓடிய பிறகு தான் நான் எழுந்து வந்தேன். ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு சென்றேன்.

அது என்னை தாக்கி கொண்டே இருந்தது. நான் சுற்றி சுற்றி வந்தேன். ஒரு கட்டத்தில் என்னை விட்டுவிட்டு அது ஓடியது. அது மீண்டும் வந்து என்னை அடித்து கொன்று விடும் என்று தான் நினைத்தேன். நல்ல வேளை அது வரவில்லை. அது என் வயிற்றில் தாக்கியிருந்தால் கண்டிப்பாக இறந்திருப்பேன் என்றார்.

ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வந்த அந்த பெண்ணை அவரது கணவர் அந்த பெண்ணை துணியால் சுற்றி அருகில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனையில் அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றார். நல்ல வேளை அவருக்கு எந்த எலும்பு முறிவும் ஏற்படவில்லை என பரிசோதனையில் தெரியவந்தது.

பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் தேவைப்படவில்லை. இடது கை மற்றும் பின் புறத்தில் மட்டும் 35 தையல்கள் போடப்பட்டது. கங்காருக்களால் குடியிருப்பு வாசிகளுக்கு தொடர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.