1
அ.தி.மு.க. பிரமுகர்கள்,  தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை சந்தித்து, “தமிழகத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்க வைத்தனர்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பித்துரை, வேணு கோபால், நவநீதகிருஷ்ணன், குமார், செங்குட்டுவன், ரபிபெர்னாட், வெங்கடேஷ்பாபு ஆகியோர் இன்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை திருவனந்த புரத்தில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
“தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செய்த பரிந்துரையை ஏற்று பெரிய அளவில் தேர்தல் தொடர்பான மற்றும் தேர்தல் தொடர்பில்லாத அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  வழக்கத்துக்கு மாறான இந்த நடைமுறையால் தேர்தலை சுமூகமாக நடத்துவது என்பது கடினமாக ஆகிவிடும்.
தமிழக தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 22-ந்தேதி வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை 9 மாவட்ட கலெக்டர்கள், 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 5 டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஒரு டி.ஆர்.ஓ.வை தேர்தல் கமிசன் மாற்றம் செய்துள்ளது.  இவர்கள் தவிர கீழ்மட்ட வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் முக்கிய பொறுப்புகள் வகிக்கும் மூத்த போலீஸ் அதிகாரிகளை உளவுத்துறை ஐ.ஜி., சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரும் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழக போலீஸ் துறைக்கு ஒட்டு மொத்த பொறுப்பு வகிக்கும் டி.ஜி.பி. தான் தேர்தல் நடத்தைக்கான அனைத்து பொறுப்புகளையும் பிரித்து கொடுத்துள்ளார்.
அந்த பணிகள் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் எழவில்லை. ஆனால் தேர்தலுக்காக தனி டி.ஜி.பி.யை நியமனம் செய்துள்ளனர். இப்படி காவல்துறையில் பெரிய அளவில் மாற்றம் செய்வது நடைமுறைக்கு எதிரானது.
தி.மு.க.வும், காங்கிரசும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது உள்நோக்கத்துடனேயே தேர்தல் கமிஷனிடம் பொய்யான புகார்களை தெரிவித்தன. அந்த புகார்களை தேர்தல் கமிஷன் உரிய முறையில் விசாரிக்காமல் போலீஸ் அதிகாரிகளையும் கலெக்டர்களையும் மாற்றம் செய்துள்ளது.
இப்படி  எதிர்க்கட்சிகளின் தவறான அறிவுரையாலும், தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்ற அவர்களது செயலாலும் அதிகாரிகள் மாற்றம் நடந்துள்ளது. தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகளை தமிழக அரசு கடைபிடிக்கிறது.
ஆனால் தேர்தலுக்கு தொடர்பில்லாத அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் போன்றவர்களை மாற்றியிருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இத்தகைய மாற்றம் நடைமுறையில் இல்லாதது.
இந்த மாற்றங்கள்அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்” – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.