அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு – 2 பேர் பலி

aruna

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்த மழையால் தவாங் மாவட்டம் பாம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம் இடிபாடுகளில் புதைந்தது. அதில் இருந்த 17 பேரும் பலியாகினர்.

இந்நிலையில், இன்று தவாங் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தோங்லெங் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன. ஒரு வீடு முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணியை தொடங்கியது. இன்றைய நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். எனவே, நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

தவாங் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு பார்வையிட்டார். பின்னர் அங்கு மோசமான வானிலை நிலவியதால் அங்கிருந்து சாலை மார்க்கமாக இடாநகருக்கு பயணம் மேற்கொண்டார்.

மாநிலம் முழுவதும் உள்ள வெள்ள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் முதலமைச்சர் கலிக்கோ புல், அந்தந்த மாவட்ட துணை கமிஷனர்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசித்து, அறிவுரைகள் வழங்கி வருகிறார்.