kudi
உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தது ஐகோர்ட்: 29-ம் தேதி பெரும்பான்மை நிரூபிக்க ஹரிஷ் ராவத்துக்கு உத்தரவு
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து ஐகோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு பிரகடனம் செய்தது. இதை எதிர்த்து பதவி இழந்த முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்பொது மத்திய அரசின் முடிவு தொடர்பாக நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாகவும் சந்தேகமும் எழுப்பினர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கும் முன்பே மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெற வாய்ப்பு இருப்பதாக ஹரீஷ் ராவத்தின் வக்கீல் அச்சம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு வக்கீலும் உறுதி எதையும் அளிக்கவில்லை. இதையடுத்து நீதிபதிகள், “நாங்கள் ஆத்திரப்படும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்காது என்று நம்புகிறோம்” என தெரிவித்தனர்.
நான்காவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. அப்போது, உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெறுவது தொடர்பான எந்த முடிவையும் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதுகுறித்த உறுதி மொழியை அளிக்கும் நிலையில் இல்லை என மத்திய அரசின் வழக்கறிஞர் கூறினார்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு திரும்ப பெறாது என எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெற்று வேறு யாரையாவது ஆட்சியமைக்க அழைத்தால் அது நீதியை கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று கண்டித்தனர்.
பின்னர் வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று மாலையில் தீர்ப்பளித்த நீதிபதிகள், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், ஹரிஷ் ராவத் வரும் 29-ம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்கள் தீர்ப்புக்கு தாங்களே தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினர். எனவே, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என தெரிகிறது.