jaya at pondy
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக மைதானத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியபோது,
’’நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வதில் எங்களுக்கு அனுபவம், திறமை உண்டு. நாட்டில் மிக பெரிய மாநிலமான தமிழகத்தில் வளர்ச்சி, திடங்களை கொண்டுவந்துள் ளாம். சிறிய யூனியனான புதுச்சேரியை வளர்ச்சி பெற செய்வதில் எங்களுக்கு நிகர் வேறு ஏது
புதுச்சேரிக்கு நிதிச்சலுகையுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும். கடன் நிலுவை ரூ.6400 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்பட்டு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். அவர்களுக்கான அனுமதி ஒற்றைச்சாளர முறையில் 30 நாள்களில் தரப்படும்.
தமிழகம் போல புதுச்சேரியிலும் உள்ளாட்சியில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும்.
செயல்படாமல் இருக்கும் புதுச்சேரி விமான நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
கருவறை முதல் கல்லறை வரை பயன் தரும் உழவர் பாதுகாப்புத் திட்டம் புதுவையில் நடைமுறைப்படுத்தப்படும். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும். விவசாயிகள் வாழ்வு நலம்பெற மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவரப்படும்.
தமிழகம் போல அனைத்து சமூக நலத்திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படும். இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்கப்படும். ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும். டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு தாலியுடன், ரூ. 50000 திருமண நிதி உதவி அளிக்கப்படும்
புதுச்சேரியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்படும். சொந்த தொழில் தொடங்க வங்கி கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உயர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜிப்மரில் 150 மருத்துவ இடங்களை 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களை உயர்த்தி, 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்படும்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுவை மாணவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு பெறப்படும்.
புதுச்சேரி மக்களுக்கு என்ன தேவையோ அதை புதிதாக அமையும் அதிமுக ஆட்சி அமைத்துத்தரும். மே 16ம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார் ஜெயலலிதா.