தொலைக்காட்சிகளில் வெளியாவது கருத்து திணிப்பு – விஜயகாந்த்

thmu

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

நான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். எனது அம்மாவிற்கு கெப்பிலிங்கம்பட்டி, அப்பாவிற்கு ராமானுஜபுரம். விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவிற்கு மாட்டு வண்டியில் வந்திருக்கிறேன். இங்கு மேம்பாலம் கட்டுவதில் பிரச்னை உள்ளது.

சிவகாசி பகுதியில் தினமும் பட்டாசு விபத்து நடைபெறுகிறது. இதில் காயமடைபவர்களை மதுரை அல்லது திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இங்கு அமைச்சர் இருந்தும் தரமான மருத்துவமனை இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவமனை அமைப்போம்.

திமுக, அதிமுக இரு கட்சிகளும் விஷ செடிகள். அவற்றை தொண்டர்களாகிய நீங்கள் மிதித்து நசுக்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக வினரால் நீங்கள் என்ன சுகத்தை கண்டீர்கள். நாங்கள் ஆட்சி அமைத்தால் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கவரி வசூலை ரத்து செய்வோம். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். நாங்கள் அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்துள்ளோம். தற்போது, அதிகாரிகள் கடமையைச் செய்ய பணம் கேட்கின்றனர்.

நாங்கள் ஆட்சி அமைக்கும் போது, ஒருவர் தவறு செய்தால், மற்ற ஐந்து பேரும் கேள்வி கேட்கலாம். விரோதிகளை மன்னிக்கலாம் ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டேன். விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தான் என சரித்திரம் சொல்லும்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கருத்து கணிப்பு கிடையாது. கருத்து திணிப்பு. எனவே, தொலைக்காட்சியை பார்க்காதீர்கள். ஆண்ட கட்சி, ஆளும் கட்சியை வீட்டிற்கு அனுப்புங்கள். இது தர்மவான்களுக்கும், அதர்மவான்களுக்கம் நடக்கும் யுத்தம். மின்துறையில் ரூ.525 கோடி ஊழல் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், வனத்துறை என அனைத்திலும் ஊழல் என்றார்.