patt66
மே தினத்தையொட்டி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் நாளை மே நாளாக கொண்டாடும் உலக பாட்டாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த மகிழ்ச்சியை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் புதிய ஊய்வூதியச் சட்டம் போன்றவை தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன. வறட்சி, விலைவாசி உயர்வு ஆகியவை மக்களின் வாழ்க்கையை முடக்கியதுடன், வாழ்வாதாரத்தையும் பறித்து விட்டன. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வறட்சியால் விவசாயிகளும், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் தொழிலாளர்களும் வேலையின்றி வாடுகின்றனர். இவர்களின் வாட்டத்தை போக்க வேண்டிய ஆட்சியாளர்கள் தங்களது வாட்டத்தைத் தணிப்பதில் தான் துடிப்புடன் இருக்கிறார்கள்.
உழைக்கும் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி ஈட்டும் வருமானத்தை அரசே மதுவைக் கொடுத்து பிடுங்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது. இந்த அவலங்களை போக்கி, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியம் ஆகும். பாட்டாளிகளின் அனைத்து பிரச்சினைகளும் இன்னும் 3 வாரங்களில் முடிவுக்கு வரும்… அதன் பின்னர் பாட்டாளிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். இதை நிறைவேற பாட்டாளிகளாகிய நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை தவறாமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தமிழகத்திலுள்ள உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாட்டாளிகள் நாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.