Pm-modi-
சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தல் மற்றும் மாற்றியமைக்கும் இந்தியா திட்டங்களுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு வழங்கிய 1 கோடி பேருக்கும் நன்றியை தெரிவிப்பதாக மோடி கூறியுள்ளார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், வசதிபடைத்தவர்கள் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக ‘விட்டுக்கொடுத்தல்’ பிரசாரமும் தொடங்கப்பட்டது.
பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று ஏராளமானோர் தங்கள் கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுத்தனர்.
இவ்வாறு விட்டுக்கொடுத்தோரின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளதாக பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் தெரிவித்தார். இதில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்களே அதிகம் என கூறிய அவர், இவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மராட்டியம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களே என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மானியத்தை விட்டுக்கொடுத்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘விட்டுக்கொடுத்தல் மற்றும் மாற்றியமைக்கும் இந்தியா திட்டங்களுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு வழங்கிய 1 கோடி பேருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.