டாக்டர் அன்புமணி ராமதாசின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் – வேட்பு மனுவில் தகவல்

an

பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் அவருடைய பெயரில் ரூ.30 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.30 லட்சத்து 12 ஆயிரத்து 915 மதிப்பிலான சொத்துகள் அவருக்கு உள்ளன.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெயரில் நிலங்கள், வீடுகள் என அசையா சொத்துகள் எதுவும் இல்லை. கார் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் அவர் பெயரில் இல்லை. அதேபோல் அவர் மீது கடனும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா பெயரில் ரூ.6 கோடியே 70 லட்சத்து 46 ஆயிரத்து 562 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. ரூ.4 கோடியே 65 லட்சத்து 16 ஆயிரத்து 325 மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. இதேபோல் டாக்டர் அன்புமணி ராமதாசின் மகள் சங்கமித்ரா பெயரில் ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 573 மதிப்பிலான அசையும் சொத்துகளும், மற்றொரு மகள் சஞ்சித்ரா பெயரில் ரூ.20 லட்சத்து 63 ஆயிரத்து 21 மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.