இளங்கோவன் பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது – வைகோ

il

திருவாரூரில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில், திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்ற அக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ’’தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, யானை உருவத்தோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு சகிக்க முடியாத, அருவறுக்கத்தக்க, இழிவான சொற்களாகும்.

இதற்கு முன்னரே இளங்கோவன் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்த போது அச்சிட முடியாத, இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதத்தில் பேசினார். இதனை கண்டித்து அ.தி.மு.க.வினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர். மேலும் உருவபொம்மை எரிப்பது போல, இளங்கோவனையும் எரிப்போம் என்றனர்.

இதனை தொலைக்காட்சியில் கண்ட நான், இளங்கோவனின் இல்லம் தாக்கப்படலாம் என்று உணர்ந்து 100 பேருடன் இளங்கோவன் வீட்டின் பாதுகாப்புக்கு சென்றேன். ஆனால் அந்த சமயத்தில், அவர் ஜெயலலிதா குறித்து கீழ்தரமாக பேசிய பேச்சு என்னவென்று எனக்கு தெரியாது. அந்த இழிவான பேச்சினை தெரிந்து கொண்ட பின்னர், இளங்கோவனின் வீட்டுக்கு சென்றது தவறு என்று புரிந்துகொண்டேன்.

கடந்த 6-ந் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்ணன் கலைஞரின் சாதி குறித்து மனதில் அணு அளவும் கருதாமல் கூறிய வார்த்தைகளை, அவரது சாதி குறித்து பேசியதாக சொல்லி தமிழகம் முழுவதும் 3 நாட்கள் எனது உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தார்கள். ஆனால் பேட்டி கொடுத்த 2 மணி நேரத்திலேயே நாதஸ்வரம் என்ற வார்த்தை, தவறான பொருள் படும்படியாக ஆகி விட்டதே என்பதனை உணர்ந்து எனது உடல் நடுங்கியது. உடனே நான், கலைஞரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூட்டணி தலைவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் மன்னிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம். தவறு என்று சொல்லுங்கள் என்றனர்.

ஆனால் மன்னிப்பு கேட்பது தான் சரி என்று எண்ணி, தாயுள்ளத்தோடு கலைஞர் மன்னிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாமல் எனது உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தார்கள்.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், திருவாரூரில் கலைஞர் முன்னிலையிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது.

ஒரு முறை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மந்திரிகளை கல்லால் அடியுங்கள் என்று என்.வி.நடராஜன் பேசினார். உடனே அண்ணா, ‘‘இந்த பேச்சுக்கு மேடையிலேயே என்.வி.நடராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். அவரும் மன்னிப்பு கேட்டார்.

அதே போல் அ.தி.மு.க. தொடங்கிய காலகட்டத்தின் போது நடந்த கூட்டத்தில் கருணாநிதி குறித்து மறைந்த கே.ஏ.கிருஷ்ணசாமி ஒரு கருத்து தெரிவித்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘‘கே.ஏ.கிருஷ்ணசாமி தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். தலைவரின் இந்த உத்தரவை ஏற்று, அந்த மேடையிலேயே கருணாநிதி குறித்த தனது பேச்சுக்கு கே.ஏ.கிருஷ்ணசாமி பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இப்படி அண்ணாவும், எம்.ஜி.ஆரும் போற்றி காத்த அரசியல் நாகரிகம் புதைகுழிக்கு போகிறது என்று எண்ணி எனக்கு வருத்தமாக இருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.