நடிகை ஜெயலலிதா அவர்களே – மாற்றாந் தாய்க்கு ஒரு மடல்!

jayalalitha letter11

”தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே இந்த மடல்.

தாயின் பரிபூரணமான பாசத்தையும், அளவில்லாத அன்பையும் இந்த உலகத்தில் எதனோடும் ஒப்பிடவே முடியாது. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், உணர்வு பூர்வமாக அறிந்து கொண்ட விஷயம் இது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையிலும் தாய்க்குதான் முதலிடம். அத்தகைய தாய்ப்பாசத்தை வைத்து, கீழ்த்தரமான அரசியல் செய்யும் உங்களை மன்னிக்கவே முடியவில்லை.

கருணையின் வடிவமானவள்தான் தாய். அத்தகைய கருணை எதுவுமில்லாமல், ஈவு, இரக்கம் சற்றும் பாராமல், ஆயிரக்கணக்கான மக்களை நாள் முழுவதும் வெயிலில் வாட்டி வதைக்கும் கொடுமையான அரக்ககுணம் படைத்த, அகங்காரம் பிடித்த சர்வாதிகாரியாகத்தான் உங்களைப் பார்க்க முடிகிறது. எந்தத் தாய் தன் குழந்தையை துன்பத்தில் வாடவிட்டு, சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாள்? மண்டையைப் பிளக்கும் வெயிலில், பிள்ளையின் தலையை தன் முந்தானையால் மூடிக் கொண்டு நடப்பவள்தான் தாய். கொதிக்கும் மணலில், தன் செருப்பை பிள்ளைக்கு அணிவித்து, காலில் கொப்புளம் போட தன்னையே வருத்திக் கொள்பவள்தான் தாய். இரண்டு புறமும் ஏராளமான ஏர் கூலர்கள் சூழ, பிரச்சார மேடையில் சுகமாய் அமர்ந்திருக்கும் உங்களை, பெற்ற தாயின் இடத்தில் எப்போதுமே வைத்துப் பார்க்க முடியாது. ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனுக்கும், மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வாடிக் கொண்டிருக்கும் போது, ஆட்சியின் சாதனைகளை பட்டியலிடும் கேவலமான உங்கள் போக்குக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

செம்பரம்பாக்கம் வெள்ளத்தால் சென்னையே மூழ்கிக் கிடந்த போது, ஊரில் இருக்கும் எங்கள் பெற்றோர்கள் எப்படி பதறினார்கள் என்பது உங்களுக்குத் தெரிய நியாயம் இல்லை. மொட்டை மாடியில் உயிர் பயத்துடன், உணவுக்கும் தண்ணீருக்கும் தவித்த எங்களை, நீங்கள் தொலைக்காட்சி வாயிலாகவாவது பார்த்தீர்களா? இப்போது பறக்கும் உங்கள் ஹெலிகாப்டர் அப்போது எங்கே போனது? முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் இருந்த நீங்கள், இப்போது ஹெலிகாப்டர் ஏறி தமிழகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்.

உங்களது உடல் நலம் குறித்து பல தகவல்கள் வருகின்றன. அதையும் தாண்டி, பரப்பரன அக்ரஹார சிறையில் இருந்து, ஜாமீனில் வெளியே வர, உடல்நலனைத்தானே காரணம் காட்டினீர்கள்? சரி.. உண்மையிலேயே உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால், உங்கள் பிள்ளைகளுக்கு அதை நீங்கள் தெரியப்படுத்த வேண்டாமா? உங்களை முதலமைச்சராக அமர்த்தி அழகு பார்த்தவர்கள், உடல் நலம் பெறவேண்டும் என பிரார்த்தனை செய்ய மாட்டார்களா? உடல் நலத்தைக் காரணம் காட்டி, காணொலிக் காட்சி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அம்மா… உங்கள் திடீர் ஆவேசம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

சரி, உங்கள் தேர்தல் பிரச்சார வீடியோ பதிவுகளை, போட்டுப் பார்த்தீர்களா? . நீங்கள் பேசும் போது யாருமே கவனிக்கவில்லை. பெயருக்குக் கூட கைத்தட்டவும் இல்லை.. காரணம், வெயில் ஒரு புறம் வாட்டி வதைக்க, வியர்வை மழையில் நெளிந்து கொண்டிருந்தார்கள். கையில் கிடைத்ததை வைத்து விசிறிக் கொண்டிருந்தார்கள். கடனுக்கு மாரடிக்க வந்தவன் கண்ணீர் விட்டால் என்ன? விடாவிட்டால் என்ன? உங்களைப் பொறுத்தவரை கூட்டத்தைக் காண்பித்தால் போதும்.. கேமராக் கண்களில் நிறையும் அளவுக்குக் மக்கள் தலைகள் தெரிய வேண்டும் என்பதுதானே புத்தியில் இருக்கிறது.

காவல்துறையினரின் மூர்க்கத்தனமான போக்கால், விருத்தாச்சலம் பொதுக்கூட்டத்தில் வெயிலில் வாடி வதங்கி, உயிர் துறந்தவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?

பணத்தால் மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என மனக்கோட்டை கட்டாதீர்கள். மக்களின் வரிப்பணத்தில், அவர்களுக்கான திட்டங்களைத் தீட்டவும், செவ்வனே அவற்றை செய்யவும்தான் உங்களைப் பிரதிநிதியாக அமர்த்தியிருக்கிறார்களேத் தவிர, நீங்கள் சுகமாக வாழ, நோகாமல் ஹெலிகாப்டரில் வந்து போக யாரும் இங்கே வரி செலுத்தவில்லை.

எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கிறது… நீங்கள் பொதுமக்களுக்கு மட்டும்தான் தாயா? இல்லை உங்கள் கழக தொண்டர்களுக்கும் தாய்தானா? அனுதினமும் தன் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று, இந்த உலகத்தில் எந்தத் தாய் எதிர்பார்க்கிறாள்? ஏன், மாற்றந்தாய் கூட, இப்படி ஒரு கொடுமையை செய்வதில்லை. பார்க்கும் போதெல்லாம் காலில் விழ வேண்டும், உங்களைப் பார்த்தவுடன், கூனிக் குறுகி, உடலை வளைத்து, தரை வரைத் தொட்டு வணக்கம் செலுத்த வேண்டும், வாயைப் பொத்திக் கொள்ள வேண்டும் என உங்கள் அமைச்சரவை சகாக்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால் வாய் திறந்து சொல்லியிருக்கலாமே? தன்மானத்தை இழந்து, சுயத்தை இழந்து, கேவலம் பதவி ஆசைக்காக உங்கள் காலில் விழும் அடிமைகள் எல்லாருமே, மனதில் வன்மத்துடன்தான் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்துதான் இருக்கும் என நினைக்கிறேன்.

உங்களை முன்னாள் நடிகை என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. எந்நாளும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அப்போது திரைப்படத்தில், இப்போது வாழ்க்கையில். ஆனால், இனிமேல் உங்கள் படம் ஓடாது என்பதை, கடைகோடி மக்களில் ஒருவனாக உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உயிர் பயம் வந்தால் கடவுளை நினைப்பது மனிதனின் இயல்பு.. தோல்வி பயம் வந்தால் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்வது உங்கள் இயல்பு… தீபாவளி லேகியம் போல, உங்களுக்கு எம்.ஜி.ஆர் என்ன தேர்தல் லேகியமா?

உங்களுக்கு தெம்பிருந்தால், திராணி இருந்தால், நல்லாட்சி செய்ததாக நம்பிக்கை இருந்தால், நீங்கள் பட்டியலிடும் சாதனைகள் உண்மையாக இருந்தால், எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லாமல், இந்தத் தேர்தலைச் சந்திக்க முடியுமா?