vilu
விழுப்புரத்தில்  இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.29) நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.
விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரம் புறவழிச்சாலை சந்திப்பு எதிரே உள்ள மைதானத்தில் பிரமாண்டமான பிரசார கூட்டத்துக்கான கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் பேசும் இடத்துடன், 13 வேட்பாளர்கள் அமர்வதற்கான பிரத்யேக பிரசார மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் நாற்காலியில் அமர்ந்து பார்க்கும் விதத்தில் மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வரின் கட்-அவுட்களும், வரவேற்பு வளைவுகளும், இரட்டை இலை சின்னங்களுக்கான பதாகைகளும் பிரசார கூட்டப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் விழுப்புரம் வருகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் பிரசாரக் கூட்டத்தில் விழுப்புரத்தில் உள்ள 11 தொகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரசார கூட்ட ஏற்பாடுகளை, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை வியாழக்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலர் இரா.லட்சுமணன் எம்.பி., விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வடக்கு மண்டல ஐஜி தாமரைக்கண்ணன், விழுப்புரம் சரக டிஐஜி அனிசாஉசேன், எஸ்.பி. நரேந்தின் நாயர் உள்ளிட்ட 7 எஸ்.பி.க்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார் வரை ஈடுபடுத்தப்பட உள்ளனர்.