மே தினம் – ஜெயலலிதா வாழ்த்து

may1`

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “மே தின” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்பிற்கேற்ற பலனின்றி அவதியுற்று இருந்த தொழிலாளர்கள், ஒற்றுமையுடன் போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையையும், உழைக்கும் மக்களின் மகத்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றுகின்ற நாளாகவும் மே தினத் திருநாள் விளங்குகிறது.

உழைப்பிற்கு என்றும் உயர்வு உண்டு, உழைக்கும் கைகளால் தான் வாழ்வில் வளமும் நலமும் பெருகும் என்ற உண்மையை உள்ளத்தில் நிறுத்தி, அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, எனதருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.