Random image

மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

than

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் யுவராஜை ஆதரித்து, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பரப்புரை மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ’’அ.தி.மு.க., ஆட்சி காணொளி ஆட்சியாகவும், ஏழை, எளிய மக்களை காப்பாற்ற முடியாத ஆட்சியாகவும் உள்ளது. இந்த தொகுதி அமைச்சரின் பெயர் சொல்லி, அவருக்கு விளம்பர வாங்கிதந்து, அவரை பெரிய ஆளாக்க விருப்பமில்லை.

அமைச்சரின் தம்பி தங்கராஜ் மீது, நில மோசடி புகார் உள்ளது. அமைச்சர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தம்பி மீது வந்த பல புகாரை மறைத்துள்ளார். அதுபோல், கடைசி நேரத்தில் தொழில் மாநாடு நடத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்திற்கு காரணம் அமைச்சர் தான். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 501 வாக்குறுதிகள் உள்ளன. முன்னேற்றம், வளர்ச்சி, இலவசம் தேவையில்லை. மக்களின் வாழ்க்கை ஒளிமயமாக அமையவே இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளிவந்தவுடன், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மின் வெட்டால் பள்ளிபாளையம் பகுதியில், விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் கந்துவட்டி வாங்கி, அதை திருப்பி கொடுக்க முடியாமல், தங்களுடைய கிட்னி விற்று கடனை கட்டிள்ளனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில், சாயக்கழிவு நீருக்காக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பள்ளிபாளையம் தலைமையிடமாக கொண்டு குமாரபாளையம் தாலுகா அமைக்கப்படும்.

இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை, தமிழகத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கு வழங்காமல், வெளிமாநிலத்திற்கு கொடுத்து அதன் மூலம், 2,000 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர் ஜெயலலிதா. விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கியது அனைத்துமே பழுதடைந்து காயலான் கடையில் தான் உள்ளது.

தமிழக அமைச்சர்கள் அவர்களுடைய தொகுதியில் ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை தான் இப்போது உள்ளது. கடந்த, ஐந்தாண்டு ஆட்சியில், விவசாயிகள், 2,400 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’’ என அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று இரவு, குமாரபாளைத்தை அடுத்த வெடியரசம்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அப்பகுதியில் வாக்குகள் சேகரித்த அமைச்சரும், வேட்பாளருமான பி.தங்கமணி பேசியது:
“திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞரின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மட்டுமே தொழில்துறை இருப்பதும் கொள்ளையடிக்க மட்டுமே பயன்படுத்துவதும் வழக்கம். பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். நோக்கியா ஆலை தொடர்பாக பலமுறை சட்டப்பேரவையில் தெரிவித்தும் பதிலளிக்காமல், தற்போது பேருந்து நிலையத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு அதிமுக அரசுதான் காரணம் என பொய்யான தகவலைக் கூறியுள்ளார். நோக்கியா செல்போன் ஆலையைக் கடந்த 2005-ம் ஆண்டு தமிழகத்துக்கு கொண்டு வந்ததே அதிமுக அரசுதான். இதன் மூலம் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றனர். 2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், 2012-ல் மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டாட்சி செய்தபோது நோக்கியா ஆலையைப் போன்ற வெளிநாடுகளைத் சேர்ந்த ஆலைகளுக்கு முன்தேதியிட்ட வரிச்சட்டத்தைத் கொண்டு வந்தனர்.

இதனால், நோக்கியா ஆலைக்கு ரூ.2000 கோடி வரி விதிக்கப்படுகிறது. இதனால், ஆலை மூடப்படும் நிலை வந்தது. தொழிலாளர்கள் வேலையிழப்பைக் கருத்தில் கொண்டு அதிமுக இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியது. ஆனால், தமிழகத்திலிருந்து நோக்கியா ஆலை சென்றதற்குக் காரணம் கலைஞரும், ஸ்டாலினும்தான். இதனை மறைத்து தற்போது பொய்யான தகவலை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக தொழில்துறை 2008-09 ஆண்டுகளில் 24-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதை ஸ்டாலின் ஒப்புக் கொள்வாரா…? கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் பெறப்பட்டு, 1 லட்சம் பேருக்குமேல் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இக்கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் பலமுறை கேட்டும் பதில் சொல்லாமல், பொதுக்கூட்டத்தில் பொய்களைக் கூறி வருகிறார் ஸ்டாலின்.

திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. எனது சகோதரர் நிலம் அபகரித்ததாக பொய்யான தகவலைக் கூறியுள்ளார். எனது சகோதரர் ஒரு நிலத்தைக் கூட வாங்கவில்லை. அப்பட்டமான பொய்யைக் கூறிய ஸ்டாலின் இதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையெனில் முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடருவேன்” என்றார்.