எஸ்.டி.பி.ஐ கட்சியின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை வெளியீடு

 

164932mmm

தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தலில் ‘சுயநல அரசியலை ஒழிப்போம், பொதுநல அரசியலை காப்போம்!’ என்ற முழக்கத்தோடு 33 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடுகின்றது.

இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (28-04-2016) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொருளாளர் முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களில் சில..

1. சமூக நீதிக்காக எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடும். அதன்படி 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பினரின் இடஒதுக்கீட்டின் அளவை மாநில அரசே தீர்மானிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை எவ்வித நிபந்தனையுமின்றி அமுல்படுத்த தொடர்ந்து போராடுவோம்.

3. அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் மனுக்கள் மீது, உரிய கால வரம்புக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் “சேவை உரிமை” சட்டம் நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும்.

4. வக்ஃப் சொத்துக்கள் கணக்கெடுப்பு 1957 க்குப் பிறகு இதுவரை நடத்தப்படாத நிலையில் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.

5. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வங்கியில் செலுத்தும் முறை நடைமுறைபடுத்தப்படும்.

6. தமிழ் மொழி வளர்ச்சிக்குரிய சட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வசிக்கும் பிறமொழி பேசுபவர்களின் உரிமையும், அவற்றை பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

7. தமிழக அரசின் அனைத்து வகையான பணி ஒப்பந்தங்களிலும் அதிகரிக்கும் லஞ்ச ஊழலை ஒழிக்க இணையதள ஒப்பந்த முறையை வலியுறுத்துவோம்.

8. தமிழகத்தில் அகதிகளாக குடியேறிய இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க முயற்சிகள் மேற்கொள்வோம்.

9. வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக மாநில அரசின் தனி அமைச்சகம் அமைக்க அரசை வலியுறுத்துவோம்.

10. பன்னாட்டு மற்றும் உள்நாட்டின் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமையை உறுதிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்.

11. தற்போதுள்ள மின் கணக்கீட்டு முறையை மாற்றி மாதந்தோறும் மின்சாரம் கணக்கிடும் முறை மேற்கொள்ளப்படும்.

12. நீர்வள ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய யூகாலிப்டஸ் மற்றும் கருவேல மரங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

13. தமிழகத்தில் லோக் அயுக்தா அமைக்க போராடுவோம்.

14. தமிழ்நாட்டிற்கு புதிய நீர் கொள்கை உருவாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

15. விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்வதோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வரையறை வகுக்கப்படும். பாரம்பரிய இயற்கை விவசாய தொழில்முறை ஊக்குவிக்கப்படும். மாவட்டந்தோறும் விவசாய உணவு பொருட்களை பதப்படுத்தும் ஆலைகள் அமைக்கப்படும். விவசாயம் சார்ந்த புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

16. அனைத்து தரப்பு மக்களும் அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வகையில் விகிதாச்சார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

17. நலிந்த பகுதிகளில் முன்னேற்றம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை உறுதி செய்யப்படும்.

18. பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் மதவேறுபாடு இல்லாமல் கருணை அடிப்படையில் பாரபட்சமின்றி விடுதலை செய்ய அரசை வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நெசவாளர் நலன், மகளிர் நலன், மீனவர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன், சிறுபான்மையினர் நலன், வணிகர் நலன் சார்ந்த பல்வேறு அறிக்கைகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

You may have missed