c.mahendran1111
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டணி த.மா.கா., தேர்தல் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு ஊறுப்பினர் சி.மகேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
மக்கள் நலக் கூட்டணி தே.மு.தி.க , த.மா.கா. ஆகிய கட்சிகளில் கூட்டணி கடந்த காலங்களில் ஏற்படாத மக்கள் அரசியலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. இதுவரையில் தமிழகத்தில் ஒரு நபர் அரசியல், ஒரு குடும்ப அரசியல் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அதற்கு மாற்றாக மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்டது தான் மக்கள் நலக் கூட்டணி.
ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வசந்தி தேவிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது. அவரை பொது வேட்பாளராக நாங்கள் முன் மொழிய மாட்டோம் என்றும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்தால் தங்களுக்கு எந்த ஆட்சேபணை இல்லை என்றும் ஏனென்றால் தற்போது நடப்பது அரசியல் போராட்டம். இதில் மக்களுக்கான அரசியல் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் தி.மு.க அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில் உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும் பணத்திற்காக அக்கட்சிகளின் வேட்பாளர்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றும் எந்த வித அரசியல் அனுபவமும் இல்லாதவர்களுக்கு பணம் மட்டும் இருந்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதால் தான் அக்கட்சிகளில் குழப்பம் நிலவுகிறது. ஆனால் மக்கள் நலக் கூட்டணியில் அது போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லை என்றும் பொதுத் தொகுதிகளில் கூட தலித் வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் மகேந்திரன் கூறினார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முதலமைச்சரமான ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரசார பொதுக் கூட்டங்களில் மக்கள் இறக்கும் சம்பவம் உலகத்தில் எந்த ஒரு தேசத்திலும் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் நடக்காத வெட்கக் கேடான, அவமானமான ஒன்று. பொதுக் கூட்டங்களில் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஏன் கூட்டங்களை நடத்த வேண்டும். பொதுக் கூட்டங்களில் மக்கள் இறந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க அ.தி.மு.க கட்சியும், அக்கட்சி தலைவி ஜெயலலிதாவும் தான் காரணம். எனவே அக்கட்சி பொதுக் கூட்டங்களில் பொதுமக்கள் இறந்த சம்பவத்திற்கு ஜெயலலிதா முழு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வெண்டும் என்றும் சி.மகேந்திரன் கூறினார்.