தமிழிசை சௌந்தரராஜனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலைமிரட்டல்

vabas

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவருக்கு நேற்று இரவு எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மிரட்டல் செய்தியில் ‘வேட்புமனுவை வாபஸ் வாங்காவிட்டால் லாரியை ஏற்றி கொலை செய்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி தமிழிசை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாங்கும் நாள் இன்று. மாலையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வேட்புமனுவை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டல் விட்டுள்ளார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழில் எழுதி இருக்கும் அவர்கள் தமிழை கொலை செய்து இருக்கிறார்கள். அதில் ‘அம்மா வாழ்க’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்காக ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை. திசை திருப்புவதற்காக கூட குறிப்பிட்டு இருக்கலாம்.

ஆனால் இந்த நடைமுறை தவறு. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். மற்ற வேட்பாளர்களும் மறைமுகமாக மிரட்டப்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இப்படி குறுஞ்செய்திகள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டால் அவர்கள் வாக்களிக்க வருவது தடைபடும். எனவே அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இரவில் பிரசாரத்தை முடித்து விட்டு 11 மணிக்கு மேல் பார்களில் சென்று மதுகுடிக்க டோக்கன் வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. சமூக விரோத செயல்களின் பிறப்பிடமே மதுக்கூடங்கள்தான். அப்படி இருக்கும் போது இரவு 11 மணிக்கு மேல் பார்களை திறந்து மதுவிற்பனை செய்வது தேர்தல் நேரத்தில் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே தேர்தல் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.