asd111
தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.
அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர மற்ற நாட்களில் பணி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.வேட்பு மனு பரிசீலனை 30-ந் தேதி நடைபெறும். வேட்புமனு வாபஸ் பெற மே மாதம் 2-ந் தேதி கடைசிநாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. 234 தொகுதிகளிலும் அனைத்து வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தொகுதியில் உள்ள தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
தமிழகத்தில், அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இறந்தது பற்றி இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி விட்டோம். இறப்பை தவிர்க்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பிரசாரம் செய்ய தடை விதிக்கக்கோரி எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்தும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
தர்மபுரி மாவட்டத்தில் லட்சக்கணக்கில் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்று இப்போது தான் பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுகிறார்கள். இதற்கு முன்பு அதுபற்றி எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை. போலி வாக்காளர்கள் பட்டியலை அவர்கள் கொடுத்தால் அதை ஏ.எஸ்.டி. என்ற வசிக்காதவர்கள், இடம் மாறி சென்றவர்கள் மற்றும் இறந்தவர்கள் பட்டியலில் வைத்து விடுவோம். போலி வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் ஓட்டு போட வந்தால் வாக்காளர் அடையாள அட்டையை தவிர தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள ஆவணங்களை காட்டித்தான் ஓட்டு போட முடியும்.
தமிழகத்துக்கு 122 பொது பார்வையாளர்கள், 32 போலீஸ் பார்வையாளர்கள் வருகிற 29-ந் தேதி வருகிறார்கள். இவர்களில் பொது பார்வையாளர்கள் 2 தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் பெயர் மற்றும் அவர்கள் எந்தெந்த தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர் என்ற விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை ஈடுபடுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். உரிய காரணங்கள் இன்றி தேர்தல் பணியை மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.