vijayakanth madurai
மதுரை அண்ணாநகரில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றுப்பேசினார்.
அவர், ‘’நாங்கள் 6 முகம் சேர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு என்றும் ஏறுமுகம்தான். இறங்கு முகம் கிடையாது. எங்கள் கட்சி 2005–ல் இருந்து பல சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலை சந்தித்து இருக்கிறது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் சுற்றிய தலைவன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க முடியாது. அ.தி.மு.க., தி.மு.க. இருவரும் பணம் கொடுத்தால் வாங்கி வைத்து கொள்ளுங்கள். இரு கட்சியும் உங்கள் பணத்தை வைத்து இருக்கிறார்கள்.
ஜெயலலிதா சொன்னதையும், சொல்லாததையும் செய்து இருப்பதாக கூறி வருகிறார். நீங்கள் சொல்லாமல் செய்தது. கூட்டத்துக்கு வந்தவர்களை சாக வைத்தது.
என்னைப்பார்த்து வருங்கால முதலமைச்சரே வருக வருக என்கிறார்கள். உண்மைதான். மே 19–ந்தேதி மதுரையில் நிச்சயமாக பதவி ஏற்பேன். என்னை இன்றே போலீசார் முதல்வர்போல பாத்திமா காலேஜ் பகுதியில் இருந்து இங்கு அழைத்து வந்தார்கள். நான் கிங்காக இருந்தால் நீங்களும் கிங்தான்.
எங்கள் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் வராது. தமிழ்நாட்டில் விரோதிகளை மன்னித்து விடலாம். துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க., தி.மு.க.வும் உளவு துறையை நம்பியே இருக்கிறது. ஆனால் எனக்கும், எங்கள் கூட்டணிக்கும் மக்கள்தான் உளவு சொல்லும் துறையாகும். எங்கள் ஆட்சி ஏற்பட்டால் மக்களுக்கும், எங்களுக்கும் எந்த இடைவெளியும் இருக்காது. தி.மு.க., அ.தி. மு.க.வுக்கு திரும்ப திரும்ப வாக்களித்தால் உங்களுக்கு அதோகதிதான்.
என் மீது 32 அவதூறு வழக்குகள் உள்ளன. வேண்டும் என்றே என்னை அலைக்கழிப்பதற்காகவே வழக்குகள் போடுகிறார்கள். நான் அதற்கெல்லாம் பயப்படமாட்டேன்.
தியாகி சசிபெருமாள் இறந்தபோதோ, நாங்கள் உண்ணாவிரதம் போன்ற போராட்டம் நடத்தும் போதோ மதுவை பற்றி தெரிவிக்காத ஜெயலலிதா, இப்போது படிபடியாக குறைக்க போவதாக கூறுகிறார். எப்படி குறைப்பார்?
இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கிற போட்டி. நாங்கள் 6 பேரும் தர்மம். அவர்கள் இரண்டு பேரும் (தி.மு.க–அ.தி.மு.க.) அதர்மம்.
இந்த விஜயகாந்த் வாழ்ந்தான் என்றால் மக்களுக்காக வாழ்ந்தான் என்று சரித்திரம் சொல்ல வேண்டும். ஜெயலலிதா மக்களுக்காக நான் என்கிறார். அப்படி என்றால் சிறுதாவூர் பங்களாவை மக்களுக்கு கொடுப்பீர்களா? உங்களிடம் முரட்டு பணம் இருந்தால், எங்களிடம் முரட்டு இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது. 6 கட்சி இளைஞர்கள் பட்டாளம் இருக்கிறது’’என்று பேசினார்.