திருச்சியில் கலைஞர் பிரச்சாரம் செய்கிறார்

kp

தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலை ஜி.கார்னர் ரெயில்வே மைதானத்தில் இன்று இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் 15 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். திருச்சி மாநகர தி.மு.க.செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசுகிறார்.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் திருநாவுக்கரசர், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி, திராவிடர் கழகம் சார்பில் பெரியார் செல்வம், வீர முத்தரையர் சேவை சங்கம் சார்பில் செல்வகுமார் ஆகியோரும் பேசுகிறார்கள்.

முடிவில் பொன்மலை பகுதி தி.மு.க. செயலாளர் தர்மராஜ் நன்றி கூறுகிறார். பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் கலைஞர் இன்று இரவு திருச்சியில் தங்குகிறார். நாளை(வியாழக்கிழமை) காலை திருச்சியில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் செல்கிறார்.