கமல் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

sab

இப்படத்தின் பூஜை இன்று சென்னை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி, இப்படத்திற்கு ‘சபாஷ் நாயுடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டார். மேலும், இந்த படத்தில் கமல், தசாவதாரம் படத்தில் இவர் நடித்த ஒரு கதாபாத்திரமான பலராம் நாயுடு கெட்டப்பில் நடிக்கவிருக்கிறார். இந்த கெட்டப்புடன் கூடிய இப்படத்தின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையில் கமல், ஸ்ருதிஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்திக், பொன்வண்ணன், பாக்யராஜ், இளையராஜா, கே.எஸ்.ரவிக்குமார், பிரபு, கிரேஸி மோகன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கமல் பேசும்போது, என்னுடைய புதிய படத்தின் பூஜையை நடிகர் சங்க வளாகத்தில் நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது தற்போது நிறைவேறியுள்ளது. இதைப்போன்று இன்னும் நிறைய படங்கள் இங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதே எனது ஆசை. அது நடக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

நடிகர் சங்க வளாகத்தில் தனது படத்தின் பூஜையை நடத்தியதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக நடிகர் சங்கத்துக்கு கமல் வழங்கினார். மேலும், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ‘லைக்கா நிறுவனம்’ ரூ.1 கோடி வழங்கியுள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.