மேற்கு வங்காளத்தில் 4-வது கட்ட சட்டசபை தேர்தலில் 78 சதவீதம் வாக்குப்பதிவு

oote

மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், 4-வது கட்டமாக நேற்று 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஹவுரா மற்றும் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மாநிலத்தின் பல்வேறு மந்திரிகள் மற்றும் ஜக்மோகன் டால்மியாவின் மகள் வைஷாலி, பெங்கால் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் லட்சுமி ரத்தன் சுக்லா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் நடைபெற்ற இந்த தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. அதேநேரம் 2 மாவட்டங்களிலும் வன்முறை சம்பவங்களும் தலைவிரித்தாடின.

டம்டம் வடக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் தன்மய் பட்டாச்சார்யா சென்ற கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயமடைந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைப்போல பல்வேறு வாக்குச்சாவடிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் நடந்தது. ஹவுரா வடக்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் ரூபா கங்குலி நுழைந்து பணியாளர்களை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இந்த தேர்தலில் கள்ளஓட்டு போடுதல், வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 180-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். நேற்றைய 4-ம் கட்ட தேர்தலில் இறுதி நிலவரப்படி 78.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.