natham
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் விரைவில் வரவிருக்கிற தேர்தலை யொட்டி, நாட்டு மக்கள் இதுவரை கண்டும் கேட்டுமிராத வகையில், அ.தி.மு.க. வில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைப் பற்றி தினந்தோறும் வருகின்ற செய்திகளைப் பார்த்தாலே, இப்படியும் ஒரு அரசியல் கட்சியா என்ற எண்ணம் தான் தமிழக மக்களுக்கு ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அமைச்சரவையிலே உள்ள அமைச்சர்கள் எல்லாம் எவ்வாறு முறை தவறிச் செயல் படுகிறார்கள், ஒவ்வொருவரும் தன்னிச்சையாக எத்தனை கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக் கிறார்கள் எங்கெங்கு சொத்துகளை வாங்கிக் குவித்துக் குபேரர்களாக ஆகி இருக்கிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் அடிப்படை ஆதாரங்களோடு விரிவாக வந்தன.
அதற்குப் பிறகு இந்த ஆட்சியில் அதிகாரிகள் எல்லாம் மிரட்டலினாலோ, ஆசையினாலோ அல்லது நமக்கென்ன என்ற பலவீனமான எண்ணத்தாலோ எவ்வாறு ஒருதலைப் பட்சமாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களைப் போல எல்லாவற்றிற்கும் துணிந்து காரியம் செய்கிறார்கள் என்று செய்தி வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா கர்நாடக சிறப்பு நீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்டபோது, ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களிலே நேரடியாகக் கலந்து கொண்ட புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளிலே வந்து பொது மக்களின் முகம் சுருங்கச் செய்தன. குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர், சம்பத் என்பவர் ஒருமுறை கொடுத்த பேட்டியில் “அம்மா அவர்களின் ஆணையின்படி” மாவட்டத்தில் பெருமழை பெய்தது என்றே கூறினாரென்றால், எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறு கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
தற்போது தேர்தல் நெருங்கி விட்டது! நாட்டில் என்ன நடைபெறுகிறது? இன்றைய (24-4-2016) “தினமலர்”“ நாளிதழில் முதல் பக்கத் தலைப்பே, “வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கு பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல் – 45 இடங்களில் சோதனை”என்பதுதான். அந்தத் தலைப்பின்கீழ் வந்துள்ள செய்திகள் என்ன?
கரூர் மாவட்டக் கலெக்டரே வேறு வழியில்லாமல், மறைக்க முடியாமல், “அன்புநாதன் குடோனில் 10.33 லட்சம் ரூபாய்; அவருடைய வீட்டில் 4.77 கோடி ரூபாய், 3 கார், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ், 12 பணம் எண்ணும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டதாக, வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, கரூரில் பணம் மட்டுமின்றி ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி சேலை மற்றும் பரிசுப் பொருள்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும்; சென்னையில் ஒரு நகைக் கடையில் சோதனை செய்யப்பட்டு, பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்கள். பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள் அதிமுக அமைச்சர்கள் சிலர் அங்கே வந்து சென்ற காட்சிகள் போன்றவை பதிவாகியிருப்பதாகக் கூறப் படுகிறது. இந்தக் கேமரா வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால் தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச அதிகாரிகள் தரப்பிலிருந்து அன்புநாதன் தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது. அவர்கள் சுதாரித்து, அன்றிரவே பல கோடி ரூபாயை வேறு இடங்களில் பதுக்கி யதாகத் தெரிகிறது. அன்புநாதன் குடோனில் இருந்து 10.33 லட்சமும், வீட்டில் இருந்து 4.77 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் 250 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கப் பணம் கைப்பற்றி தேர்தல் கமிஷனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்”“ என்று தெரிவித் திருக்கிறார்கள்.
“பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள்! ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, தமிழ் நாட்டில் எவ்வாறு நடைபெறுகிறது, ஜனநாயகத்தையும், தேர்தல் நடைமுறை விதிகளையும் எந்த அளவுக்குப் பின்பற்றுகிறது என்பதற்கு இதை விடவா வேறு சான்று வேண்டும்? அன்புநாதன் என்பவர் யார்? மணிமாறன் யார்? இவர்களுக்கும் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இந்தப் பணப் பரிமாற்றம்? வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற்று மறுபடியும் தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்ற நப்பாசையா? அமைச்சரவை என்பதற்குக் கூட்டுப் பொறுப்பு உண்டல்லவா? முதலமைச்சர் ஜெயலலிதா இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், கெலிகாப்டரில் ஏறிக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார் என்றால், நானா இந்த நாட்டை கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன்? கண்டெய்னர்களும், ஆம்புலன்ஸ் வண்டிகளும், கேமராவும் கைப்பற்றப்பட்டிருக் கின்றனவே; எதற்காகக் கைப்பற்றப்பட்டன, கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளைப் பற்றிய விபரங்கள் என்ன, கைப்பற்றப்பட்டிருப்பது நாலரைக் கோடி ரூபாயா, நூ நூ று கோடி ரூபாயா, இருநூ ற்றி ஐம்பது கோடி ரூபாயா என்பன போன்ற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு முறையான பதில் சொல்லி விட்டு என்னைப் பார்த்துக் கேள்வி கேட்க வேண்டும்! இல்லாவிட்டால் பணம் கொடுத்துத் தேர்தலில் வென்று மேலும் மேலும் பணத்தைக் குவிப்பதற்குத் தான் இத்தனை நாடகமும், ஏராளமான பொய்யும் என்று அனைவரும் நினைப்பது உறுதிப்படுத்தப் பட்ட உண்மையாகிவிடும்!’’என்று தெரிவித்துள்ளார்.