mnk
தமிழக சட்டமன்ற தேர்தலை தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இதில் தே.மு.தி.க. மற்றும் த.மா.கா.வின் தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும். சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படும். 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
விவசாயிகள், நெசவாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின்கீழ் 150 நாட்கள் வேலை தரப்படும். இத்திட்டத்தின்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் தினக்கூலி 250 ரூபாயாக உயர்த்தப்படும். தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
ஆற்று மணல், தாது மணல் மற்றும் கிரானைட் கெள்ளை தடுத்து நிறுத்தப்படும். பசுமை வீடு திட்டத்தின் நிதி 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். சசிபெருமாள் மதுஒழிப்பு இயக்கம் தொடங்கப்படும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
மாவட்டந்தோறும் விவசாய கல்லூரிகள் தொடங்கப்படும். மின்சார கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும்.
திருநங்கைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.