Karunanidhi
திமுக தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதத்தில், ’’முதலமைச்சர் ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி அவருடைய கேள்விகளுக்கு நாம் என்னதான் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கமாக பதில் அளித்தபோதிலும், மதுவிலக்கு பற்றிப் பொய் பேசுவதை அவர் நிறுத்துவதாக இல்லை. தற்போது கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) கலைக்கப்பட்டு, இந்த விற்பனைக் கழகத்தின் மூலம் தற்போது செய்யப்பட்டு வரும் மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் மதுவிலக்குப் பிரச்சினையில், தமிழகச் சட்டப்பேரவையில் இந்தத் துறையின் அ.தி.மு.க. அமைச்சர் படிப்படியாகக்கூட மதுவிலக்கைக் கொண்டு வர இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து, அது அனைத்து நாளேடுகளிலும் வந்தது. அதற்குப் பிறகு தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசும் போது, அமைச்சர் பேரவையில் தெரிவித்ததற்கு மாறாக, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வரப் போவதாக அறிவித்தார். அப்படி அரைகுறை எண்ணத் தோடு அறிவித்தவர்தான், தற்போது தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றுதானே உள்ளது, ஏன் பூரண மதுவிலக்கு என்று குறிப்பிடவில்லை, முதல் கையெழுத்து போடப்படும் என்று ஏன் வாக்குறுதி அளிக்கவில்லை, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே தி.மு.க.வுக்குக் கிடையாது என்றெல்லாம் ஏதோ கற்பனை செய்து கொண்டு, கேட்டுத்தான் வைப்போமே என்பதற் காகப் பேசியிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசியிருப்பதில் இருந்தே, அவர் மக்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் திரும்பத் திரும்ப என்ன பாடுபடுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. “தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெளிவாக தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் கூறிய பிறகும், படிப்படியாக மது விலக்கைக் கொண்டு வரப்போகிறேன் என்று பொதுத் தேர்தலுக்காக வேறு வழியின்றிப் பேசியிருக்கும் ஜெயலலிதா, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே எனக்குக் கிடையாது என்று இல்லாத ஒன்றை இட்டுக்கட்டித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். எப்படியோ? நாம்தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறோம் என்பதை ஜெயலலிதாவே புரிந்துகொண்டு விட்டார் என்பது நன்றாகவே புரிகிறது!
மேலும் ஜெயலலிதா பேசும்போது, “என்னைப் பொறுத்தவரை பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. ஆனால் பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது” என்றும் கூறியிருக்கிறார். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை என்றால், கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியிலேதான் ஜெயலலிதா இருக்கிறார். அனைத்து அதிகாரமும் அவர் கையில்தானே இருக்கிறது! பூரண மதுவிலக்குக்காக, படிப்படியாகவாவது அதைக் கொண்டு வர, ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டாரா? தியாகி சசிபெருமாள் மரணமடைந்த போதும், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லிப் பெண்கள் போராட்டம் நடத்தியபோதும் அவற்றை ஜெயலலிதா வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே இருந்தார்! மதுபானம் தயாரிக்கும் “மிடாஸ் தொழிற்சாலை” யாருடையது? அது யாருடைய பெயரில் இருக்கிறது? அதன் இயக்குநர்களாக யார் யார் இருந்தார்கள் – இப்போது இருக்கிறார்கள்? கடந்த ஐந்தாண்டு காலத்தில் அந்த நிறுவனத்திலிருந்து மட்டும் எந்த அளவுக்கு மது பானங்கள் வாங்கப்பட்டன? அதனால் இலாபம் அடைந்தவர்கள் யார்? “பார்”களுக்கு நேரடியாகவே அந்த நிறுவனம் மது விற்பனை செய்வதாகச் செய்திகள் வருகின்றனவே! இதற்கான பதில்களை முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில் சொல்லத் தயாரா?
“தி.மு.க. தனது 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டதாக கருணாநிதியும், தி.மு.க. வினரும் பொய் சொல்லி வருகின்றனர்” என்றும் ஜெயலலிதா பேசி, அவர்களது கட்சி இதழில் வெளிவந்துள்ளது. 2006 தேர்தல் அறிக்கை பற்றி பத்தாண்டுகள் கழித்து இப்போது என்ன அவசியம் ஏற்பட்டது? இருந்தாலும் நான் பேசியதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் நிலம் வழங்குவோம் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்ததா? இல்லையா? அதைச் செய்யவில்லையே என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். 1 இலட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் – விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம் கழக ஆட்சியில் வழங்கப் பட்டது. இது தமிழகத்திலே உள்ள விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் அனைவர்க்கும் தெரியும். அந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லையா? அல்லது அதைப்பற்றியும் ஒரு பொய்யைச் சொல்லி வைப்போம் என்று கூறுகிறாரா? ஆனால் கழக ஆட்சிக்குப் பிறகு இந்த ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை விவசாயிகளுக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது என்று ஜெயலலிதா சொல்லத் தயாரா?
ஜெயலலிதா தி.மு.கழகத் தேர்தல் அறிக்கை பற்றி கேட்டதால், 2006 தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னது என்ன, செய்தது என்ன என்ற புள்ளி விவரத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
* ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்குவதாகச் சொன்னோம். அவ்வாறு வழங்கியதில் 1 கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன் பெற்றன.
* 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;
* 2006க்குப்பின் கழக ஆட்சியில் 35 இலட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 இலட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டன.
* மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு;
* பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006இல் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 9 இலட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது;
* ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 இலட்சம் தள்ளுபடி;
* மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்;
* 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்;
* விவசாயிகளைச் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 இலட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 34 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 11 இலட்சத்து 55 ஆயிரத்து 525 உறுப்பினர்கள் சேர்ப்பு;
* 20 இலட்சத்து 75 ஆயிரத்து 512 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 995 கோடியே 78 இலட்சத்து 48 ஆயிரத்து 815 ரூபாய் உதவித் தொகை;
* 3742 கோடியே 42 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு கோடியே 62 இலட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங் களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
* 661 கோடி ரூபாய்ச் செலவில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன;
* 8 இலட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்;
* காமராஜர் பிறந்த நாளில் “கல்வி வளர்ச்சி நாள்” என பள்ளிகளில், கல்வி விழா;
* 73 இலட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்; சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்;
* 11 இலட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.
* 2010-2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி., வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.
* ஆண்டுதோறும் 24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 இலட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்;
* தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
* “மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி” கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;
* பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமென சட்டம்;
* நூறாண்டுக் கனவை நனவாக்கிச் “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” சென்னையில் அமைப்பு.
* 4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப் பட்டுள்ளன;
* ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 இலட்சத்து 76
ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 இலட்சம் ரூபாய் நிதியுதவி;
* 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை;
* “அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்” தமிழகம் முழுவதும் நடைமுறை; 8 இலட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்;
* அரசு ஊழியர்களுக்கு “மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்”;
* “உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” நடைமுறை; 1 கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் பதிவு; இதுவரை 2 இலட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை மக்களுக்கு 667 கோடி ரூபாய்ச் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன;
* ஏறத்தாழ 2 இலட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற்சாலைகள் திறப்பு;
* ஏறத்தாழ 5 இலட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர் களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன;
* வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்
* 2006க்குப்பின் 26 இலட்சத்து 94 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 1 இலட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு;
1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டது.
* 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட சுழல் நிதி 281 கோடியே 88 இலட்சம் ரூபாய்.
* ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டது.
* அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்;
* இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;
* அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;
* அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவ புரங்கள்.
* சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” 15.9.2010இல் திறப்பு;
* ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத்திட 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு; புதிய சட்டமன்ற – தலைமைச் செயலக வளாகம் திறந்து சாதனை;
* ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவி யுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “மெட்ரோ ரயில் திட்ட” அமைப்புப் பணிகள்
* 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், “ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்” ;
* 630 கோடி ரூபாய்ச் செலவில், “இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்” நிறைவேற்றம்;
* 2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;
* ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்க ளுக்கும் 6வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன.
* 21 இலட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” என்னும் புரட்சிகரமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படி அடுக்கடுக் காகச் சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு எண்ணற்ற உறுதிமொழிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டன. சொன்னதைச் செய்தோம்; செய்ததை, ஜெயலலிதா கேட்பதால், சொல்கிறோம்!
ஆனால் 1. ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 41 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று அ.தி.மு.க. உறுதி அளித்தது. அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அந்தத் தேர்தல் அறிக்கையின் கதி என்ன?
2. 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் ஜெயலலிதா இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? அவற்றின் விவரம் என்ன?
3. சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் ஜெயலலிதா 20-2-2016 வரை 187 அறிக்கைகளைப் படித்தாரே, அவற்றில் குறிப்பிடப்பட்ட எத்தனை அறிவிப்புகளை இதுவரை நிறைவேற்றியிருக்கிறார்? அவற்றின் விவரம் என்ன?
2006ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு நான் இங்கே விரிவாகப் பதில் அளித்திருக்கிறேனே; இதைப் போல நான் கேட்டிருக்கும் இந்த மூன்று கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும். பொய்களையே முதலீடாக வைத்து, பொய் அரசியல் நடத்தி, பொய்களை மட்டுமே உற்பத்தி செய்து, அவற்றை வினியோகித்து, அப்பாவித் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் ஜெயலலிதா, அரசியலில் பொய் சொல்வதில் “கின்னஸ்” சாதனையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தைக் கை விட்டு; “தமிழகத்தில் வசந்தம் வீசுகிறது” – “நீங்கள் கனவு காணும் ஆட்சியை நான் வழங்குவேன்” என்பன போன்ற “நகைச்சுவைகளைத்” தவிர்த்து விட்டு; இப்போதாவது பொய்கள் சொல்வதை நிறுத்தி, இதுவரை சொன்ன பொய்களுக்குக் கழுவாய் தேடிக் கொள்ள முயற்சிப்பது சாலவும் சிறந்தது. உடன்பிறப்பே, ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்காக மாத்திரம் இவ்வளவு தகவல்களையும் திரட்டி நான் எடுத்துரைக்கவில்லை.
இவற்றையெல்லாம் நமது வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி தெளிவுபடுத்திடவும், ஜெயலலிதாவின் பொய்களைத் தோலுரித்துக் காட்டவும் பயன்படும் என்பதால்தான் இங்கே சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதா அள்ளி வீசி வரும் பொய்களிலிருந்தும், அவற்றின் தீய விளைவுகளிலிருந்தும் நமது மக்களைக் காப்பாற்றிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையைச் சிறப்பாக ஆற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொய் முகத்தை அடையாளம் காட்டு; நமது புதிய ஆட்சி தானாகப் பூக்கும்! வெற்றி நமதே!’’என்று தெரிவித் துள்ளார்.