வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: மூவர் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூரையடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுமித்ரா. இத்தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். பாஸ்கர் நேற்று தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆட்டோவில் சென்றார். சின்ன கொள்ளகுப்பம் பகுதியில் ஆட்டோ சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் கும்பல் மீது மோதுவதுபோல் சென்றுள்ளது. இதனை அந்த 7 பேர் கும்பல் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 7 பேர் கும்பல் பாஸ்கரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கினர்.இதில் பாஸ்கர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த பாஸ்கரை மீட்ட உறவினர்கள், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாஸ்கரின் மனைவி தரப்பில் வாணியம்பாடி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பாஸ்கர் தரப்பின் புகாரை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான காவலர்கள், அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், சூர்யா, வெள்ளையன் ஆகிய மூவரை கைது செய்ததோடு, மேலும் நால்வரை தேடி வருகின்றனர்.