ஓமலூர் அருகே காற்றாலையின் ராட்சத இறக்கையை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியும், பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும், நடுவே இருந்த சரக்கு ஆட்டோ மீது மோதியதில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கஞ்சநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். கொண்டலாம்பட்டி அருகே நாட்டாமங்கலத்தில் மாட்டிறைச்சி கடை வைத்துள்ளார். கஞ்சநாய்க்கன்பட்டியில் மாடு ஒன்றை வாங்கிய ரமேஷ், நேற்று  முன்தினம் இரவு, நாட்டாமங்கலத்தில் உள்ள தனது கடைக்கு கொண்டு செல்ல சாதிக்பாஷா என்பவரது சரக்கு ஆட்டோவில் மாட்டை ஏற்றினர். அப்போது, சாதிக்பாஷாவின் மகன் ரகமது பாஷா, ரமேஷின் உறவினர் பாலு ஆகியோரும்  அதில் வந்தனர்.  நள்ளிரவு, கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, காற்றாலையின் ராட்சத இறக்கையை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அதனை பின்தொடர்ந்து, தண்ணீர் டேங்கர் லாரி, காலி பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி, ரமேஷ் சென்ற மாடு ஏற்றிய சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு லாரி என அடுத்தடுத்து அணி வகுத்து சென்றன. பின்னால் வந்த லாரி திடீரென சரக்கு ஆட்டோ  மீது மோதவே அது முன்னால் சென்ற லாரி மீதும், அந்த லாரி தண்ணீர் டேங்கர் மீதும் அடுத்தடுத்து மோதின. இதில், இரு லாரிகளுக்கும் இடையில் சிக்கிய சரக்கு ஆட்டோ, அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி ரமேஷ்,  பாலு, ரகமது பாஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாதிக்பாஷா இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.