டில்லி

ந்த ஜூன் வரை முடிந்த காலாண்டில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை மிகவும் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனைகள் மிகவும் குறைந்து வருகின்றன.   இதற்கு வங்கிகளின் கடன் கொள்கை மற்றும் மக்களின் மனப்பான்மை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன.  அதைத் தவிர சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல், பொருளாதார சரிவு உள்ளிட்டவைகளும் இதற்கு காரணங்கள் ஆகும்.

ஆட்டோமொபைல் விற்பனையில் முதல் இடங்களில் உள்ள மாருதி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களும் இந்த விற்பனை சரிவுக்கு தப்பவில்லை.  ஜூன் வரை முடிந்த காலாண்டில் 712,620 கார்கள் விற்பனைஆகி உள்ளன.  இது கடந்த 2000 ஆண்டுக்கு பிறகு மிகக் குறைந்த அளவில் நடந்துள்ள விற்பனை ஆகும்.    இது சராசரி விற்பனையை விட 23.1% குறைவாகும்.

மொத்த வாகன விற்பனையில் சென்ற காலாண்டு 12.33% சரிவை சந்தித்துள்ளது.  இதில் அதிக அளவில் மூன்று சக்கர வாகன விற்பனை சரிந்துள்ளது.   பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கை 225,732 ஆகி 17.5% சரிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 12 மாதங்களில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஆன விற்பனை ஆகும்.   இது சென்ற வருடம் இதே மாதத்தை விட 24%  குறைவாகும்.

மாருதி சுசுகி  மகிந்திரா மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் இந்த விற்பனை குறைவால் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி உள்ளன.  ஒரு சில முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர்.  குறிப்பாக மும்பை மாநகரில் 64 வாகன முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர்.   அதை தவிர 61 வாகனங்களின் உதிரி பாக விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.