அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தில் ஆதிக்க சாதி கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு மரணமடைந்த 19 வயது தலித் பெண்ணின் உறவினர்கள், போஸ்ட்மார்டம் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, உங்களால் ஆங்கிலம் படிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டதாக அவரின் உறவினர்கள் மீடியாக்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து, மீடியாக்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுமதித்துள்ளது ஹத்ராஸ் நிர்வாகம். இதன்மூலம், போஸ்ட்மார்டம் அறிக்கை தொடர்பான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வன்புணர்வு மற்றும் மரண நிகழ்வை, ஹத்ராஸ் நிர்வாகமும் காவல்துறையும் கையாண்ட விதம், நாடெங்கிலும் கடும் கண்டனத்தை சந்தித்து வருகிறது.
பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான உமா பாரதியே, இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாதிக்கப்பட்டு மரணமடைந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் அவசர அவசரமாக எரித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், போஸ்ட்மார்டம் பெறுவது தொடர்பான விஷயமும் தற்போது வெளியாகி, அரசுக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.