ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு : தலை மற்றும் மார்பில் காயம் : பிரேத பரிசோதனை அறிக்கை

தூத்துக்குடி

வேதாந்தா குழுமத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பக்கி சூட்டில் மரணமடைந்தவர்கள் தலை மற்றும் மார்பில் குண்டு காயங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

கடந்த மே மாதம் தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடந்தது. கூட்டத்தினரை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கி சூடு நிகழ்த்தினர். இதில் 13 பேர் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை அந்த அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் 12 பேருக்கு தலை மற்றும் மார்பில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்துள்ளன. பாதி பேருக்கு மேல் பின்புறமிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இறந்தவர்களில் இருவர் தலையின் பக்கவாட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 17 வயதான ஸ்னோலின் என்னும் பெண் மிகவும் இளையவர் ஆவார்.

இறந்த ஸ்னோலினின் தலையின் பின்புறமாக பாய்ந்த குண்டு அவர் வாய்வழியாக வெளியே வந்துள்ளது. அத்துடன் அவருடைய கழுத்தின் பின் பகுதியில் குண்டு பாய்னத்தால் அவருக்கு இருதய நுரையீரல் அடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த ஸ்னோலின் குடும்பத்தினர் தங்களுக்கு இந்த பிரேத பரிசோதனை அறிக்கை தரப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு ஐநா மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க துப்பாக்கி சூடு நடத்தும் போது இடுப்புக்கு கீழே சுட வேண்டும் என வழிகாட்டு முறை இருப்பதாகவும் கொலை செய்யும் முறையில் சுடக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு குறித்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

தமிழக அரசு சமர்ப்பித்த ஆவணங்களின் படி 3 செல்ஃப் லோடிங் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மொத்தம் 69 தோட்டாக்களில் 30 தோட்டாக்கள் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளிலிருந்து வெளிவந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர போலீஸார் .303 துப்பாக்கிகள் மூலம் கூடுதலாக 4 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் 0.410 துப்பாக்கிகள் மூலம் 12 ஷாட்கள் சுடப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கிறது