sc1
 
இந்தியாவில் நிலவும் வறட்சியின் கோரப்பிடியில் 12 மாநிலங்களில் வசிக்கும் 33 கோடி மக்கள் சிக்கித் தவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் நிலவும் வறட்சியை சமாளிப்பது குறித்து மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் நிலவும் வறட்சிக்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் குற்றம்சாட்டியது. இந்த நிலையில், எங்கள் மாநிலத்தில் வறட்சி நிலவவில்லை என்று கூறி பிரமாணப் பத்திரிகைக்கு பதிலாக, விளக்க அளிக்கை சமர்ப்பித்த குஜராத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமரிசித்தது.
“ஏன் நீங்கள் பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், நீங்கள் குஜராத் என்பதால், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தமில்லை. வரும் வியாழக்கிழமை வறட்சி நிலை குறித்து பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று காட்டமாக உத்தரவிட்டனர்.
குஜராத்தின் சில பகுதிகளில் 96 சதவீதம் வேளாண் பயிர் செய்யப்படுவதாக நீங்கள் கூறுகிறார்கள். ஆனால், குஜராத்துக்கு போதிய மழை பெய்யவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே, எல்லாம் சரியாக இருக்கிறது என்று நீங்கள் மத்திய அரசுக்காக கூறுவது தவறானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.