அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு

மதுரை:

புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதிலும்  சாதிய பாகுபாடு எழுந்துள்ளதால்,  போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

இது தொடர்பான வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக நடத்துவதற்கு நீதிமன்றமே குழு நியமிக்கும் என்று எச்சரித்த  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வழக்கு தொடர்பாக பிற்பகலில் ஆஜராக மதுரை ஆட்சியருக்கு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ந்தேதி  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக சமுதாய மோதல்கள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை  அந்த பகுதியை சேர்ந்த  தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக் குழுவினல்,  அவனியாபுரத்தில் வசிக்கும் 17 ஜாதி பிரதிநிதிகள் அடங்கிய கிராமப் பொதுமக்கள் குழு ஒன்றை உருவாக்கி அக்குழு மூலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தவும், குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும் மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  அனைத்து சமுதாய பிரதிநிதிகளையும் அழைத்து 3 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டாத நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையை தொடர்ந்து,  ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் போதிய கருத்தொற்றுமை இல்லை என்றால் இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக நடத்துவதற்கு நீதிமன்றமே குழு நியமிக்கும் என்றது.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர்,  காவல் ஆணையர், புறநகர் காவல் கண்காணிப்பாளர் இன்று பிற்பகல் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு, பிற்பகலுக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் விசாரணையை தொடர்ந்து ஜல்லிகட்டு குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed