நெட்டிசன்:
பத்திரிகையாளர் ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்கள், “மாற்றம் தரும் முன்னேற்றம்!” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:
“நாம் தகவல்தொழில்நுட்பத்தின் நுனியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று இணையத்தின் மூலம் உலகின் எந்தவொரு மூலையிலும் நமது கோரிக்கையினை ஒலிக்கச் செய்யமுடியும் எனும் ஒப்பற்ற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், இன்றும் போராட்டம் என்றால் உடனே உணர்சசிவயப்பட்டு உடலை எரித்து தன்னை மாய்த்துக்கொள்ளும் இளைஞர்களைப் பார்க்கிறோம். இன்றைய இந்த தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்த தவறுகிறார்களா? என்று யோசித்துக்கொண்டிருந்தபோது…….
14333202_10154513128351575_5133251574946164530_n
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ஜிடோன் குட்மேன் எனும் பதிமூன்று வயது சிறுவனைப் பற்றி நேற்று படிக்க நேர்ந்தது. இந்தச் சிறுவன், இரத்தத்தில் அரியவகை குறைபாடு காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிசசை பெற்று வருகிறான். இவனைப் பார்க்க நலம் விசாரிக்க நண்பர்கள் உறவினர்கள் வந்துபோகிறார்கள்.
ஆனால் சிலபேருக்கு அதுபோல யாரும் வராதது கண்டு ஆச்சர்யமடைகிறான். பிறகு விசாரிக்கும்போது இங்குள்ள (நியூ சௌத் வேல்ஸ்) மருத்துவமனைகளில் கார் பார்க்கிங் கட்டணம் மிக அதிகம். எந்த அளவுக்கு என்றால் மருத்துவச்செலவுக்கு ஆகும் செலவை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று அறிகிறான்.
“நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஒரே பெரும் ஆறுதல், அவர்களை அவர்களின் உறவுகளும் நண்பர்களும் வந்து நலம் விசாரிப்பது மட்டுமே. என் குடும்பத்தினரால் அதிக அளவு கட்டணத்தை கட்டி பார்க்கிங் செய்து வரமுடியும். ஆனால் குறைந்த வருமானத்திலிருப்போர்களால் இது சாத்தியமாகாது. அதற்காக பெரும் ஆறுதல் என்று சொல்லப்பட்ட நலம் விசாரித்தல் என்பது ஏழைகளுக்கு கிடைக்காமலே போய்விடுமா?” என்று கேள்விகேட்ட சிறுவன் குட்மேன் ஒரு முடிவுக்கு வந்தான்.
வேறொன்றுமில்லை ‘சேஞ்ச்.ஆர்க் ‘ இணையதளத்தில் உடனடியாக இதுகுறித்த கோரிக்கை மனு ஒன்றை எழுத ஆரம்பித்தான். தீயெனப் பரவிய இந்தக் கோரிக்கை கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாயிரம் (டிஜிட்டல்) கையெழுத்துகளுடன் மருத்துவமனை நிர்வாகம் மட்டுமல்ல அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் வரை சென்றடைந்தது. இதன்பலனாக, அரசு உடனடியாக நோயாளிகளின் வாகனங்களுக்கும், நோயாளிகளை நலன் விசாரிக்க வரும் உறவினர்களுக்கும் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் சலுகைக் கட்டணத்தை அறிவித்திருக்கிறது.
இந்த ‘சேஞ்ச்.ஆர்க் ‘ அதாங்க change . org பற்றி எழுதணும்னு நேற்று நினைத்தேன். நேற்று நேரில் வந்திருந்த தம்பி Bilal Aliyarஇடமும் இதுபற்றி சொல்லியிருந்தேன். ஆனால், வேலை, நேரம் என்று கடந்து எழுதமுடியாமல் போனது. தற்போது தங்கைVeeralakshmi Saravanajothi அதே ‘சேஞ்ச்.ஆர்க்’ மூலம் மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் விடுத்த கோரிக்கையொன்றில் கையொப்பமிட்டு, அது மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் வரை சென்றடைந்துள்ளது. தற்போது அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு 100 கி.மீ தொலைவிலிருக்கும் தமது மகளுடன் சேர்ந்திருக்கிறார். இதற்காக அந்தக் கோரிக்கை மனுவில் (டிஜிட்டல்) கையொப்பமிட்ட சுமார் தொண்ணூறாயிரம் பேரில் இவரும் ஒருவர் என்பதை நினைத்து பெருமைப்படுவோம்.
மாற்றத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்ளும் நமது இளைஞர்களுக்கு இந்த வலைத்தளம் ஏற்படுத்தும் மாற்றங்களை கற்றுக்கொடுப்போம். “