இன்று ஆடி செவ்வாய்: அத்தனையும் தரும் அவ்வையார் விரதம்

இன்று ஆடி மாதம் முதல் செவ்வாய். இம் மாதத்தில்  வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆடி செவ்வாயில் அவ்வையார் பாட்டிக்கு கொழுக்கட்டை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவ்வையார் வழிபாடு பரவலாக நடைபெறுகிறது.

பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணெய்த் தேய்த்து குளிப்பது நல்லது.  ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது காலங்காலமாய் இருந்து வரும் பொழமொழி.

இப்படிச் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும், அமைதி நிலவும். மேலும் ஆடிச் செய்வாய் அன்று நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார்.

இதற்கான நோன்புதான் அவ்வை நோன்பு.   பெண்களுக்கு வசதிப்படும்  ஆடிச்செவ்வாயில் ஒரு வீட்டில் அக்கம்பக்கத்து பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் அனுதி இல்லை.  இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு சொல்வார்.

இப்பூஜையில் செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு அளிக்க கூடாது. இந்த பூஜைக்கு புங்க மர இலைகளை இட்லி தட்டில் வைத்து அதன் மேல் கொழுக்கட்டைகளை செய்து வேக வைக்க வேண்டும். பிடி கொழுக்கட்டையோடு அல்லாமல் கொழுக்கட்டை அடை செய்வதும் அவசியம்.  நுனி இலையில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலைகளையும் புளிய மர இலைகளையும் பரப்பி அதன் மேல் செய்து வைத்த அடை கொழுக்கட்டைகள், மற்றும் வெற்றிலை, பாக்கு, பழங்களோடு தேங்காய் உடைத்து வைத்து விநாயகரையும் ஔவையாரையும் நினைத்து படைக்க வேண்டும்.

பூஜையில் எத்தனை பெண்கள் கலந்து கொள்கின்றனரோ அத்தனை அடை கொழுக்கைடைகளை கடவுளுக்கு படைத்து அதில் விளக்கு போட்டு பூஜை முடிந்த உடன் அதை உண்ண  வேண்டும். இக்கொழுக்கட்டைகளில் உப்பில்லாவிட்டாலும் தேங்காய் நிறைய சேர்ப்பதினால் தனிச்சுவையோடு இருக்கும்.

மேலும் ஒரு தேங்காய் மூடியில் சிறிது தேங்காயை துருவி வைத்து கொழுக்கட்டைகளுடன் சேர்த்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இத்தேங்காய் பூவையும் பெண்கள் மட்டுமே உண்ண வேண்டும்.  இந்த பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாக பார்க்க கூடாது.

பூஜைகளில் கலந்து கொள்பவர்களில் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்களே முன்னின்று செய்வார். அவரே இப்பூஜையில் மிக முக்கியமான ஒன்றான அவ்வையார் கதையை சொல்வார்.  இதனை பூஜையின் பொழுது மட்டுமே சொல்லி கேட்க வேண்டும்.

இக்கதையை மூன்று முறை சொல்லி சூடம் ஏற்றி நெய்வேத்தியம் செய்து பூஜையை முடிக்க வேண்டும். மறுநாள் விடியற் காலையிலேயே எழுந்து இந்த பூஜை செய்த இடத்தை சுத்தம் செய்து பிள்ளையார் மற்றும் பயன்படுத்திய இலைகளை எவரும் பார்த்துவிடாதவண்ணம் நீரில் கரைத்து விட வேண்டும். பூஜை செய்த நாளுக்கு மறுநாள் யாருக்கும் எந்த பொருளையும் கடனாகவோ, தானமாகவோ அளிக்க கூடாது.

இந்த பூஜையை செய்தால் தீர்க்க சுமங்கலியாக மகிழ்ச்சியுடன் வாழலாம். , நீங்காத செல்வம், நல்ல கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும். மணமாகாத கன்னியர்க்கும் திருமணமாகும். குழந்தையில்லா தம்பதிகளுக்கு பிள்ளை வரம் கிடைக்கும்.

அவ்வையாருக்கு என்று கோயில் இருப்பது தெரியுமா?

குமரி மாவட்டத்தில் தாழக்குடி அருகே இக்கோயில் உள்ளது. ஆடி செவ்வாய் அன்று இந்த கோவிலில் பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காது.  கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரித்து அம்மனுக்கு படைத்து வழிபடுவர்.

இந்த ஆண்டு ஆடி பிறப்பே செவ்வாய்கிழமையன்று பிறப்பதால் முதல் நாளில் இருந்தே அவ்வையார் பாட்டியை வழிபட ஆரம்பிப்பார்கள்.  . ஆடி மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த கோயிலுக்கு வந்து கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைத்து வழிபடுவது பல்வேறு நன்மைகளை அளிக்கும்.

 

 

கார்ட்டூன் கேலரி