இளையராஜாவுக்கு கேரளத்தின் ஹரிவராசனம் விருது!

திருவனந்தபுரம்: தமிழகத்தின் இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசின் சார்பில் ஹரிவராசனம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது கேரள மாநில அரசு மற்றும் சபரிமலை சேவசம் போர்டு ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் வழங்குவதாகும்.

சபரிமலையின் புகழைப் பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வருகின்ற ஜனவரி 15ம் தேதி இளையராஜாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுடன் சேர்த்து ரூ.1 லட்சம் ரொக்கமும் ‘Worshipful Music Genius’ என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், பி.சுசிலா, ஜேசுதாஸ் மற்றும் பாடகி சித்ரா ஆகியோர் இந்த விருதை இதற்கு முன்னர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.