சென்னை :
 
வசியமற்ற பொருட்களை வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை செலவழிப்பதை தவிர்க்கவும். உங்கள் எதிர்காலத்திற்கு  பணம் அவசியம் என்பதால் அதை  புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.
ஊரடங்கை தொடர்ந்து நாடு ஒரு மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை எதிர்த்துப் போராடி வரும் வேலையில், அத்தியாவசியம் இல்லாத   பொருட்களை விற்க, முன்பதிவு மற்றும் சலுகைகளை சில்லறை விற்பனையாளர்கள்  அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஃபியூச்சர் குழுமத்தால் இயக்கப்படும் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒன்றான சென்ட்ரல்’ தனது சங்கிலித்தொடர் கடைகளில் ஆடைகள், பாதணிகள் போன்றவற்றை வாங்குவதற்கான முன்பதிவுகளை அறிவித்துள்ளது.
இதேபோல், எல்ஜி மற்றும் சாம்சங் ஆகியவை தங்கள் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான முன்பதிவுகளை ஆன்லைனில் திறந்துள்ளன. முன்பதிவுகளுடன், இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க பரிசுகள், தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் திட்டங்களையும்   வழங்குகின்றன.
சென்ட்ரல்’ வணிக நிறுவனம் தனது   வாடிக்கையாளர்களுக்கு  ஷாப்பிங் வவுச்சர்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.  இந்த வவுச்சர்களை நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் வாங்கலாம். முன்பதிவு வவுச்சர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

நீங்கள் ரூ. 2,999 அல்லது ரூ. 4,999 மதிப்புள்ள வவுச்சரை வாங்கும் போது முறையே ரூ. 4,000 மற்றும் ரூ. 7,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கலாம்.
ஊரடங்கு முடிந்ததும் கடைகள் திறக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் உள்ள எந்த ‘சென்ட்ரல்’ கடையிலும் வவுச்சரை கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆடைகள், காலணிகள் மற்றும் கைப்பைகள் வாங்க மட்டுமே இந்த வவுச்சரை பயன்படுத்த முடியும்.
கடைகள் திறக்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் இந்த வவுச்சரை பயன்படுத்தி நீங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டும். மேலும், ஆன்லைனில் வவுச்சரை வாங்கும் போது நீங்கள் தேர்ந்தெடுத்த  குறிப்பிட்ட கடையில் இருந்து மட்டுமே ஷாப்பிங் செய்யலாம்.
கடைகள் திறந்து 30 முதல் 180 வது நாளுக்கு இடையில் நீங்கள் ஷாப்பிங் செய்தால் கூடுதல் நன்மையைப் பெற முடியாது. இருப்பினும், நீங்கள் வவுச்சர் தொகைக்கு பொருட்களை வாங்கலாம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, கடைகள் திறக்கப்பட்ட 180 நாட்களுக்குப் பிறகு இந்த ஷாப்பிங் வவுச்சரை நீங்கள் பயன்படுத்தவும்  பணத்தைத்  திரும்பப் பெறவும்  முடியாது.
எல்ஜி மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களும்  தங்கள் மின்னணு தயாரிப்புகளுக்கான வாடிக்கையாளர் முன்பதிவுகளை  வலைத்தளங்களில் துவங்கியுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளரிடமிருந்து பொருட்கள்  விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளன.
இருப்பினும், ஆன்லைனில் வாங்கிய பொருட்களின் விநியோகம் சிவப்பு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்களுக்கு தாமதமாகும் என்றும் தெரிவித்துள்ளன.
சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களுக்கு  ரூ .6,000 வரை தள்ளுபடி மற்றும் 55 இன்ச் அளவு கொண்ட அல்ட்ரா HD ஸ்மார்ட் 4 k டி.வி.களுக்கு ரூ .40,000 வரை தள்ளுபடி அளிக்கிறது, சில மாடல்களுக்கு  தள்ளுபடி மாறுபடுகிறது.

குறிப்பிட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது  15 சதவீதம் வரை ‘கேஷ்பேக்’குகளை நிறுவனங்கள் வழங்குகின்றன. கூடுதலாக, சாம்சங்  18 மாதங்கள் வரை எந்த கட்டணமும் இல்லாத EMI கள்  வழங்குகிறது. பெரும்பாலும், எந்த கட்டணமும் இல்லாத EMI கள் 12 மாதங்கள் வரை மட்டுமே வழங்கப்படுகின்றன.
ஊரடங்கு நீக்கப்பட்டதும், பெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் கட்டணமில்லாத EMI திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்குகிறது.  ஆனால் கட்டணமில்லாத EMI உடன், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு, இதுபோன்ற கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுவதில்லை.
தள்ளுபடி திட்டங்களுடன் வழங்கப்படும் பெரும்பாலான தயாரிப்புகள் பழைய மாடல்களா அல்லது லேட்டஸ்ட் மாடல்களா என்பதை விழிப்புடன் கவனித்து வாங்கவும்.
சந்தேகப் படும்படியான  கடைகள் அல்லது ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில்  ஷாப்பிங் செய்வதோ அத்தியாவசியமற்ற பொருட்களை அவசரமாக வாங்குவதைத் தவிர்க்கவும்.

வேலை இழப்புக்கள் மற்றும் ஊதிய பிடித்தம்  அதிகம் நிறைந்த மிகவும் கடினமான பொருளாதார சூழலில் நாம்  வாழ்ந்துகொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, செலவு செய்வதில் விவேகத்துடன் இருப்பது நல்லது.
இதுபோன்ற பல கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து வாடிக்கையாளர்கள் ஏமாறும் படலம் தொடர்கதையாகி வருவதால், தள்ளுபடிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து சில தகவல்கள் MoneyControl எனும் நிதி ஆலோசனை இணையதளம், பல்வேறு நிதி முதலீட்டு ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனைகளை  தொகுத்திருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிதி சிக்கல் நேரத்தில், பணத்தை சிக்கனமாக செலவு செய்வது குறித்து நாம் கவனமுடன் செயல்படவேண்டிய தருணம் இது, என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
பல நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை விற்றுத் தீர்ப்பதற்காக தள்ளுபடிகள் மற்றும் ‘கேஷ்பேக்’ திட்டங்களை வழங்குகின்றன, உங்களுக்கு உடனடி தேவை  இல்லாததை வாங்க வேண்டாம். குறைந்தது அடுத்த ஆறு மாதத்திற்கு உங்கள் கைகளில் இருக்கும் பண கையிருப்புதான் உங்களை காப்பாற்றும்.
உங்கள் பணப்புழக்கத்தையும்  வேலை நிலைமையையும் முதலில் மதிப்பிடுங்கள். உங்கள் வேலை பாதுகாப்பானது மற்றும் இன்னும் EMI கள் செலுத்த வேண்டி இருந்தால், முதலில் உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துங்கள்.

COVID-19 தொற்றுநோய் விரைவில் நீங்காது, பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளதால் வேலை கிடைப்பது சிரமமான காரியமாக இருக்கும்.  எனவே, நுகர்வோர் என்ற வகையில், பணத்தை செலவுசெய்வதற்கு முன் அதனை மதிப்பிடவேண்டும்.
அத்தியாவசியமற்றவற்றை வாங்குவதற்கு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, முதல் முன்னுரிமை, நிலுவையில் உள்ள கடனை திருப்பிச் செலுத்துவதும், இரண்டாவது, வருமான ஆதாரத்தை பெருக்கும் மாற்று வழியை உருவாக்குவதும் ஆகும். பின்னர், உங்களிடம் இன்னும் பணம் இருந்தால், அத்தியாவசியமற்றவற்றை வாங்கலாம் என்கிறார்கள் இந்த  நிதி மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள்.