ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக திருவாரூரில் விழிப்புணர்வு கூட்டம்! பிஆர் பாண்டியன் ஆவேசம்… .வீடியோ

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில், அரசு சார்பில்  ஓஎன்ஜிசிக்கு ஆதரவான  விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுவது குறித்து தகவல் அறிந்து, அங்கு வந்த விவசாய சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், அங்கிருந்த அரசு அதிகாரியிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்து, கருத்து கேட்பு கூட்டத்தை தடுத்து நிறுத்தினார்.

தமிழகத்தில் உள்ள விளைநிலங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்தியஅரசு அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல் அதிகம் விளையும் காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது.  அதைத்தொடர்ந்து, காவிரி  டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டமுன்வடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20ம் தேதி தாக்கல் செய்தார். இந்த சட்டத்துக்கு தமிழக கவர்னர் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில்,  தமிழக அரசின்  சட்டத்திற்கு புறம்பாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் ONGC க்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர், பெரியகுடி ஆர்டிஓ. (RDO) அங்குள்ள பொதுமக்களிடம்  விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விவசாய  சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், அங்கு வந்து, விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வந்த ஆர்டிஓ உள்பட அரசு அதிகாரிகள், ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். இதையடுத்து விழிப்புணர்வு கூட்டம் நிறுத்தப்பட்டது.