மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு: தமிழகஅரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை:

மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று  தமிழகஅரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து விழிப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும் அரசை வலியுறுத்தி உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுக்கு மாதவிடாய் காலங்களில் வழங்கப்படும் நாப்கின்களில் முறைகேடு செய்ததாக திருச்சி பெண்கள் சிறைச்சாலை அதிகாரி மீது புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், புகாரில் உண்மை இருப்பதாகவும், இதுபோன்ற மற்ற சிறைச்சாலைகளிலும் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், திருச்சி  திருச்சி பெண்கள் சிறைத்துறை கண்காணிப்பாளர் ராஜலெட்சுமி மீது ஒழுங்கு நடவடிக்க எடுக்கவும் தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் தாய்மை பேறு அடைவதற்கு இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு முறையே மாதவிடாய். பெண்கள்  பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை மாதவிடாய் கொடுமையை அனுபவித்தாக வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் மாத விடாய் காரணமாக இளம்வயது பெண்கள் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மன அழுத்தம் மற்றும் ஒழுங்க பணி வரன்முறை  காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டு மேலும் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மாதவிடாய் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.