டெல்லி:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. மத்திய சுற்று சூழல் துறையின் கீழ் வரும் இந்த வாரியம ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும்.

தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக வாரியத்தில் மோதல் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்த பிறகு கடந்த மாதம் 24ம் தேதி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வாரிய செயலாளர் ராஜ்குமார் வக்கீலும், வாரிய செயற் குழு உறுப்பினருமான அஞ்சலி சர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில்… ஜல்லிக்கட்டை எதிர்க்கும் மனுவை திரும்ப பெறுமாறு கேட்டிருந்தார். இந்த கடிதம் மீடியாக்களில் கசிந்தது. இதையடுத்து ‘‘செயலாளரின் கடிதம் சட்டவிரோதமாகும். செயலாளர் என்பவர் வாரியத்தின் ஊழியர். அவர் உறுப்பினர் கிடையாது. அவர் என்னை கேள்வி கேட்க அதிகாரம் இல்லை’’ என்று அஞ்சலி சர்மா தெரிவித்திருந்தார்.

இதனால் ஜல்லிக்கட்டு விஷயத்தில் விலங்குகள் நல வாரியத்தின் நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்த வாரியத்தில் புதிய தலைவர் நேகி ஒரு தீர்மானத்தை கடந்த மாதம் 27ம் தேதி கொண்டு வந்தார். ஜல்லிக்கட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்தப்படடது. இதில் வாரியத்தின் 21 உறுப்பினர்களில் 13 பேர் எதிர்க்க வேண்டும் என்றும், மனுவை திரும்ப பெறக் கூடாது என்றும் தெரிவித்தனர்.

அதனால் இந்த தீர்மானத்தை செயல்படுத்த விலங்குகள் நல வாரியம் முடிவு செய்துள்ளது. ‘‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு அந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நாங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. வாரியம் மனுவை திரும்ப பெற வேண்டும் என்று முடிவு செய்தால் தான் நான் மனுவை திரும்ப பெற முடியும்’’ என்று அஞ்சலி தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக அஞ்சலி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இச்சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.