சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் வெடிக்கும்: பாரூக் அப்துல்லா எச்சரிக்கை

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை பாஜக ரத்து செய்தால், காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார்.


காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பாரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமீத்ஷாவும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

370-வது பிரிவை அவர்கள் ரத்து செய்தால், நாங்கள் அமைதியாகவா இருப்போம்? அவர்கள் தவறு செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் நாங்கள் போராடுவோம்.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் அவர்களை அல்லா பார்த்துக் கொள்வார்.  இத்தகைய நடவடிக்கை காஷ்மீரில் சுதந்திரப் பேராட்டத்தை நோக்கி அழைத்துச் செல்லும்” என்று எச்சரித்தார்.

370, 35ஏ ஆகிய பிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான பொது நலன் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

370-வது பிரிவு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தையும், 35ஏ பிரிவு மாநில மக்களின் நலன் மற்றும் உரிமைகளை காக்க மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.