நோட்டு மாற்றுவதில் முறைகேடு: வங்கி அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் எச்சரிக்கை

மத்திய அரசு உயர்மதிப்பு கரன்சிகளுக்கு தடை விதித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில வங்கி அதிகாரிகள் பண முதலைகளுக்கு முறைகேடாக புதுநோட்டுக்களை மாற்றிக்கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியானது.

அமலாக்க பிரிவு ஆக்ஸிஸ் வங்கியை சேர்ந்த இரு மேலாளர்களிடம் சுமார் 3 கிலோ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்துள்ளது. புதுநோட்டுக்களை சட்டவிரோதமாக மாற்றிக்கொடுத்ததால் அவை சன்மானமாக பெறப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமலாக்க பிரிவும், சி.பி.ஐயும் வங்கி அதிகாரிகளின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. எனவே முறைகேடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார்.

நோட்டுத்தடை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்துவரும் அளப்பரிய பணி போற்றத்தக்கது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட தியாகமாக வேலை செய்து மக்களது குறைகளை போக்கி வருகிறார்கள். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது சிலர் மட்டுமே அவர்கள் யாராக இருந்தாலும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அப்பொழுது நிதியமைச்சருடன் உடனிருந்த ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா, நாங்களே சில முறைகேடு செய்யும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

 

Axis Bank has assured govt of action against errant officials Arun Jaitley