ஆக்சிஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவு: பட்னாவிஸ் மனைவி பணிபுரிவதால் அரசு வங்கி கணக்கை மாற்ற தாக்கரே முடிவு!

--

மும்பை:

மும்பையில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவராக அம்ருதா ஃபட்னாவிஸ் பணிபுரிவதால், அங்கு வைக்கப்பட்டுள்ள  அரசு வங்கி கணக்கை மாற்ற உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்துள்ளது. இது தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த அட்சியின்போது,  முதல்மந்திரி மனைவி அதிகாரியாக பணியாற்றும் தனியார் வங்கியில் கணக்குகளை அரசு தொடங்குவது ஏன்? இதை மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று மகாஷ்டிரா மாநில முன்னாள் முதல்மந்திரி பிரிதிவிராஜ் சவான் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு வங்கிக் கணக்குகள் மீண்டும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா, ஆக்சிஸ் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருபவர். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது,  மராட்டிய அரசின் திட்டங்கள் தொடர்பான வங்கி கணக்குகள்  பட்னாவிஸ் மனைவி அதிகாரியாக பணிபுரியும் ஆக்சிஸ் வங்கியில் தொடங்கப்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியிலிருந்த அரசின் கணக்கை தன் மனைவி பணிபுரியும் ஆக்சிஸ் வங்கிக்கு தேவேந்திர பட்னாவிஸ் மாற்றினார். அதன்படி,  மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் பேரின் சம்பளக் கணக்குகள், ஆக்சிஸ் வங்கியால் கையாளப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000 கோடி அரசு பணத்தை அந்த வங்கி கையாளுகிறது.

இந்த நிலையில் ஆக்சிஸ் வங்கியில் அரசு வைத்திருக்கும் கணக்கை நிறுத்திவிட்டு அதை மீண்டும் தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கிக்கு மாற்ற ஆலோசனை நடந்து வருவதாகக்  தகவல் வெளியாகி உள்ளது. இதை அம்மாநிலத்தின் நிதியமைச்சரும் என்.சி.பி-யைச் சேர்ந்த தலைவருமான ஜெயந்த் பாட்டீல் உறுதி செய்துள்ளார். வங்கி மாற்றத்துக்கு வேறு ஒரு காரணமும் கூறப்படுகிறது.

சமீப காலமாக மராட்டிய மாநிலத்தில், பாஜகவை தனிமைப்படுத்திவிட்டு, சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், பட்னாவிஸ் மனைவி அம்ருதா, தாக்கரே குடும்பத்தினர் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்,.

`தாக்கரே என்ற பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் பால் தாக்கரே ஆகிவிடமுடியாது’ எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையல், சிவசேனா பெண்கள் அமைப்பினர், அம்ருதாவுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், அமருதா  பணிபுரியும் ஆக்சிஸ் வங்கியில் உள்ள அரசு  வங்கிக் கணக்குகளை மீண்டும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபிறகு இதற்கான நடவடிக்கை தொடங்கும் என கூறப்படுகிறது.