அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: போக்சோ நீதிமன்றம் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு

சென்னை:

யனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான  வழக்கை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம், பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, சென்னை அயனாவரத்தில் உள்ள உயர்வகுப்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த ஒரு குடும்பத்தினரின்  மாற்றுத்திறனாளி 17வயது சிறுமியை அந்த குடியிருப்பில் வேலைசெய்து வந்த காவலர், பிளம்பர் உள்பட  17பேர் அவ்வப்போது பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான புகாரின்பேரில், அயனாவரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள்மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் விசாரணை நடைபெற்று வந்தது.   வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதையடுத்து எஞ்சிய 16 பேர் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடந்தது.

வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் 6 -ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்திருந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு  பிப்ரவரி 1-ம் தேதி வழங்கப்படூம் என நீதிபதி  மஞ்சுளா அறிவித்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்தின்படி சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ள தாகவும், அதற்கு விசாரணை நீதிமன்றத் துக்கும் அதிகாரம் உள்ளதாகவும் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.