அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு: உச்ச நீதிமன்றம்

டில்லி:

ச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறுவதற்கு முன்பு அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்க திட்டமிட்டு உள்ளார். அதன்படி, அக்டோபர் 18-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அதே வேளையில்,  மத்தியஸ்தர் குழுவினரும் விருப்பப்பட்டால் பேச்சு வார்த்தையை தொடரலாம் என்றும் அறிவித்து உள்ளது.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சினை  50ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒருமித்த தீர்வை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதி மன்றம் மத்தியஸ்தர் குழுவை நியமித்து விசாரணை நடத்தியது.

இந்த குழுவில்  ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீரவி சங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள், கடந்த சில மாதங்களாக அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்தனர்.

அதில், நிலம் தொடர்பான விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இதன் காரணமாக, உச்சநீதி மன்றதே வழக்கை விசாரிக்கும் என்று தலைமைநீதிபதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து தினசரி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மீண்டும் மத்தியஸ்தர் குழுவினர் நடவடிக்கையை தொடங்க வேண்டும் சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாடா, மூல வர் ராம் லல்லா அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுதொடர்பாக மத்தியஸ்தர்குழுவினர் உச்சநீதி மன்றத்தல் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும், மத்தியஸ்தர் குழுவினர் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும்,  அதேசமயம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை நிறுத்த தேவையில்லை’’ என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அதையடுத்து,  பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என மத்தியஸ்தர் குழு மனு செய்துள்ளது. ஆனால்,தற்போது நீதிமன்றத்தில்  விசாரணை வேகமாக நடந்து வருகிறது. இந்த விசாரணை தொடரும் என்று தெரிவித்த நீதிபதிகள், மத்தியஸ்தர் குழுவினர் தங்களது  முயற்சியை தொடர விரும்பினால்  தொடரலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தனர்.

மேலும், அயோத்தி நிலம் தொடர்பான  வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி பதவி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.