லக்னோ: அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி திட்டப் பணிகள் குடியரசு தினமான வரும் 26ம் தேதி முறைப்படி தொடங்குகின்றன.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமா் கோயில் கட்ட  உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. அயோத்தியின் மற்றொரு இடத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கா் நிலம் நிலம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தனிப்பூா் என்ற கிராமத்தில் சன்னி வக்பு வாரியத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் மசூதியுடன் மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம், இந்திய-இஸ்லாமிய கலாசார ஆய்வு மையம் ஆகியவை கட்டப்படவுள்ளன.

அவை அனைத்தும் கொண்ட மாதிரி புகைப்படம் அண்மையில் வெளியாக, திட்டப் பணிகள் குரயரசு தினமான வரும் 26ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மசூதியின் கட்டுமானப் பணிக்கு அமைக்கப்பட்ட இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தனிப்பூர் மசூதி திட்டப் பணிகளை குடியரசு தின கொண்டாட்டங்களுடன் தொடங்க இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அயோத்தி மாவட்ட வாரியத்திடம் கட்டுமானத்துக்கு அனுமதி பெற விண்ணப்பித்து, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகளை தொடங்குவதன் மூலம் திட்டப் பணிகளை முறைப்படி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுமான திட்டத்தின் ஒரு பகுதியாக, பசுமையான பகுதி ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. அதில் அமேசான் மழைக்காடுகள் முதல் ஆஸ்திரேலியாவில் உள்ள காடுகள் போன்ற பசுமையான பகுதி உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.