லக்னோ :

த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன.

ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை என்ற அமைப்பு, இந்த கோயிலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்த அமைப்பின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரிஜி நாக்பூரில், கோயில் கட்டுமான விவரங்கள் குறித்து நேற்று பேட்டி அளித்தார்.

“ராமர் கோயிலின் பிரதான கட்டிடத்தை கட்டுவதற்கு மட்டும் 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும்” என குறிப்பிட்ட அவர் “ஒட்டு மொத்த கோயில் வளாகத்தை கட்டி முடிக்க குறைந்த பட்சம் ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவு பிடிக்கும்” என்றார்.

“கோயில் கட்டுவதற்கு ஆன்லைன் மூலமாக இதுவரை 100 கோடி ரூபாய் பணம் வசூலாகியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“ராமர் கோயில் உருவாவதில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகம் விரும்புகிறது” என்று கூறிய கோவிந்த் தேவ் கிரிஜி, “நாடு முழுவதும் 40 லட்சம் கிராமங்களில் உள்ள 11 கோடி குடும்பங்களை அணுகி நன்கொடை பெறுவதற்கு திட்டமிட்டோம்” என்று மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி